ஓசூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் பதில்!

தமிழகத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 25, 2019, 02:54 PM IST
ஓசூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் பதில்! title=

தமிழகத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைப்பெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்திய பிரதா சாஹூ விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் ஜனவரி 31-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், தமிழகத்தில் உள்ள 37,000 ஓட்டுச்சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டு பேசிய அவர், ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது என்பதை இலக்காக கொண்டு தேர்தல் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறிந்து பரவிவரும் சர்ச்சை கருத்துகள் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சிறப்பாக உள்ளது, அதில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பே இல்லை என தெரிவித்தார். 

அதேப்போல்., பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தனது பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி-யின் தொகுதியான ஓசூர் தொகுதி பற்றி கேள்வி எழுப்பபட்டதற்கு... ஓசூர் தொகுதி காலியாக உள்ளது என சட்டசபை செயலாளரிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ கடிதம் ஏதும் வரவில்லை. கடிதம் கிடைத்த உடன் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

கல்வீச்சு மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள பாலகிருஷ்ண ரெட்டி, தனக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஓசூர் தொகுதி குறித்த அறிவிப்பு தமிழக அரசு தரப்பில் வெளியிடப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News