கச்சத்தீவு பற்றி நான் பேசினால் ஓட்டம் பிடிப்பதா? ஜெயலலிதா கேள்வி

-

Last Updated : Jun 23, 2016, 02:30 PM IST
கச்சத்தீவு பற்றி நான் பேசினால் ஓட்டம் பிடிப்பதா? ஜெயலலிதா கேள்வி title=

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து போது அவர் பேசியதாவது:-

கச்சத்தீவு தொடர்பாக நான் பேசும் போது உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றால், கூச்சல் போடுவதா? கூச்சல் போடுவதால் என்ன ஆகப்போகிறது? உங்கள் தலைவர் பதில் சொல்லட்டும். உங்கள் தலைவர், தலைவர்தானா? அல்லது இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர்தான் உங்கள் தலைவரா? கூச்சல் போடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நான் கேட்கும்  கேள்விகளைக் கேட்டே தீருவேன். 

சபாநாயகர் தனபாலை பார்த்து எனக்குச் பேச அனுமதி தாருங்கள். அவர்கள்(திமுக) யார் பேச வாய்ப்பு கேட்கிறார்கள்? அவர்களது தலைவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர். அவர் இங்கே வந்து பதில் சொல்லியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு வெளியே அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த அறிக்கையைப் பற்றித்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களால்மு டியவில்லை என்றால் உட்காருங்கள். அறிக்கை கொடுத்தவரே இங்கே வந்து பதில் சொல்லட்டும் இன்னும் சில நிமிடங்களில் எனது பதிலுரையை முடித்துவிடுவேன். அதன் பின்னர் அவர்கள் என்ன பேச விரும்பினாலும் தாங்கள் அனுமதிக்கலாம்.

இதுவரை எதிர்க்கட்சி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்து எனது உரையைக் கேட்டார்கள். ஆனால் கச்சத்தீவு என்று சொன்னவுடனே அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பது தெரியும். கச்சத்தீவைப் பற்றி சில கேள்விகளை நான் எழுப்ப விரும்புகிறேன் என்று சொன்னவுடன் ஓட்டம் பிடித்துவிட்டார்கள். இதைத்தான் எதிர்பார்த்தேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால், கச்சத்தீவை பற்றி நான் பேசினால், முதலில் கூச்சல் போட வேண்டியது, அதன் பின்னர் அந்த கூச்சலால் இங்கே எதையும் தடை செய்ய முடியவில்லை என்றதும், ஓட்டம் பிடிக்க வேண்டியது.

ஒன்றை நான் அனைவருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கச்சத்தீவு பிரச்சினை பற்றி கடந்த 20--நம் தேதி அன்று நான் இங்கே சில கருத்துகளைத் தெரிவித்தேன். அதற்கு திமுக தலைவர் கருணாநிதி இந்த அவைக்கு வெளியே ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். 21-நம் தேதி அன்று திமுக தலைவர் கருணாநிதி கச்சத்தீவைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அனைவருக்கும் நான்  நினைவு படுத்த விரும்புவது கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர் ஆவார். சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு இந்த அவைக்கு வருவதற்கு எல்லா உரிமையும் உண்டு. அவர் இந்த அவைக்கு வந்திருக்கலாம்; அவருடைய கருத்துகளைத் தெரிவித்திருக்கலாம். நான் கேட்கும் கேள்விகளுக்கு அவரே இங்கே பதில் அளித்திருக்கலாம். ஆனால், அவர் இங்கே வராமல், வெளியில் இருந்து கொண்டு அறிக்கை விடுகிறார். கருணாநிதி விட்ட அறிக்கை தொடர்பாகத்தான் நான் பேசி கொண்டிருக்கிறேன். நான் கேட்கின்ற கேள்விகள் கருணாநிதியைப் பார்த்துத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்குப் பதில் சொல்ல வக்கிருந்தால், இங்கே இருந்த திமுக உறுப்பினர்கள் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல வக்கில்லை என்றால், அவர்களுடைய தலைவரை இங்கே அழைத்து வர வேண்டும் இங்கே பதில் சொல்வதற்கு. அவர்களுக்குத் தலைவர் யார் என்ற குழப்பம் வேறு. அவர்களுடைய தலைவர் யார்? தி.மு.க.வின் தலைவர் என்று குறிப்பிடுகின்ற கருணாநிதியா? அல்லது இங்கே அமர்ந்திருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவரா? யார் தலைவர் என்பதிலேயே குழப்பம். அந்தத் தலைவர் கருணாநிதி, வேண்டுமென்றால் இந்த அவைக்கு  வரலாம், பதில் சொல்லலாம். இவர்களுக்கு கச்சத்தீவைப் பற்றி எதுவும் தெரியாது என்றால், பேசாமல் இருக்கலாம்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.

 

 

Trending News