சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை உறுதி? 2வது வழக்காக இன்று தீர்ப்பு!
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரங்களை தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார். வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் தண்டனை விவரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருவரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார்.
மருத்துவ அறிக்கை ஆய்வு செய்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அப்போது பொன்முடி தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு சட்டத்துறை செயலாளராக இருந்த தாங்கள் (நீதிபதி ஜெயச்சந்திரன்) தான் உத்தரவு பிறப்பித்ததாக சுட்டிக்காட்டினார். அதற்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன் நடந்த நிகழ்வு அது என்று நீதிபதி பதிலளித்தார்.
தொடர்ந்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார். அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வைக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
மேலும் படிக்க | யார் இந்த பொன்முடி? பகுதிநேர பேராசியர் டூ அமைச்சர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ