POCSO ACT: ஒரு சில நாட்களுக்கு முன்பாக கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அந்த சம்பவத்தை குறித்து யூடூப் (Youtube) வலைப்பதிவுகளில் நிறைய பதிவுகள் பதியப்பட்டது. அதில் தற்கொலை செய்து கொண்ட மாணவி குறித்தான அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 வலைஒளி (Youtube) வலைப்பக்கங்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அது மாதிரியான பதிவுகளை உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பக மாநில அமைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ் அவர்களிடம் போக்சோ சட்டம் குறித்தும் தற்போது அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் குறித்தும் ஒரு சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவரும் விளக்கமாக பதில் அளித்தார்.
கேள்வி: போக்சோ சட்டம் 23(2) என்ன கூறுகிறது?
பதில்: பாதிக்கப்பட்ட குழந்தையின் எந்தவிதமான அடையாளங்களையும், அதாவது பெயர், முகவரி, ஒளிப்படம் குடும்பம் விவரம், பள்ளி, வாழுமிட விவரங்களை மற்றும் எவையெல்லாம் ஒரு பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தினை வெளிக்காட்டுமோ, அந்த தகவல்கள் எதையும் எந்த ஊடகமும் வெளியிடக்கூடாது என்கிறது POCSO சட்டம் பிரிவு 23(2) பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் மீண்டும் சமூகத்தில் அடையாளப்படுத்துவது அவர்களை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாக்கும் செயல் என்பதோடு அந்த குற்ற செயலின் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு தடையாகி விடும். போக்சோ சட்டம் 23(1) ன் படி ஊடகங்கள் மட்டுமின்றி எந்த ஒரு தனி நபரும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எந்த ஒரு அடையாளத்தையும் வெளியிடக்கூடாது என்றார்.
கேள்வி: 18 வயது குறைந்த பெண் பிள்ளைகளுக்கு எதிரான குற்றங்களின் தகவல்கள் வெளியிடுவதற்கான முறைகள் ஏதும் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?
பதில்: 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மட்டும்மல்ல ஆண் குழந்தைகள் உட்பட எந்த குழந்தைகளின் அடையாளத்தையும் வெளியிடுவது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்ட குழந்தையின் அடையாளம் எக்காரணம் கொண்டும் வெளிப்படாத வகையில் செய்தியில் குறிப்பிடலாம். ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அடையாளங்களை வெளியிடுவது பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனிற்கு அவசியம் என வழக்கினை விசாரிக்கும் அதிகாரமுள்ள நீதிமன்றம் உறுதியாக நம்பினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை வெளியிட நீதிமன்றம் மட்டுமே அனுமதிக்கலாம்.
ALSO READ | மேலாடையை நீக்காமல் தொடுவதும் பாலியல் வன்முறை தான்: உச்ச நீதி மன்றம்
கேள்வி: இதுபோன்ற பெண் பிள்ளைகளின் மீதான குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள்?
பதில்: குழந்தைகள் மீதான வன்முறை என்பது இச்சமூகத்தின் அழுக்கான அடையாளம். குறிப்பாக பாலியல் வன்முறை இரு பாலருக்கும் நடக்கிறது. அனால் ஆண் குழந்தைகள் மீது நடைபெறும் ஒரின சேர்க்கை சார்ந்த வன்முறைகள் இன்னமும் நாம் வெளிக்கொணராமல் இருக்கிறோம். ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அல்லது பாலின குழப்பம் உள்ள குழந்தையோ - சக மனிதர்களை சதையாக, காட்சிப்பொருளாக பார்க்கும் எண்ணத்தை விதைக்கும் வகையில் உள்ள பாலின பாகுபாடுகளை அகற்றி பாலின சமத்துவம் பற்றிய புரிதலை நம் வீட்டில் இருந்து ஆரம்பித்தால் மட்டும் இக்குற்றங்கள் குறையும் குறிப்பாக ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் பெண்களை சக மனிதிகளாக மதிக்கவும், உடன் படிக்க, விளையாட, பணியாற்ற வரும் பெண்களுக்கு அவர்களுக்கென ஒரு காரணமும், தேவையும், அவசியமும் இருக்கிறது. அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் தடையாக இல்லாமல், ஆதிக்கம் செலுத்த முயலாமல் இருப்பதும் முக்கியம்
கேள்வி: குற்றங்களை தடுப்பதற்கான தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?
பதில்: குழந்தைகளை ஆற்றல் உள்ளவர்களாகவும், மனதில் உள்ளதை தைரியமாக பேசக்கூடிய திறன் உள்ளவர்களாக மாற்றிட கூடிய முயற்சிகளையும், அதற்கான பயிற்சிகளையும் கொடுக்கும் வகையில் குழந்தைகளை சங்கமாக்கி வருகிறோம். குழந்தைகள் பயமில்லாமல் தைரியமாக பேச ஆரம்பித்தால் "முடியாது" "என்னிடம் அப்படி நடந்துக் கொள்ளாதீர்கள்" "நான் சத்தம் போட்டு எல்லோரையும் கூட்டிடுவேன்" என உரத்த குரல் கொடுக்கும் குழந்தைகள் குற்றங்களில் இருந்து தப்பித்து கொள்ள வாய்ப்பு அதிகம் மேலும் பல்துறை வல்லுனர்களுக்கு பயிற்சி அளிப்பது, சட்டங்களை சரியாக முறையாக நடைமுறைப்படுத்த வழக்காடுவது என குழந்தைகளின் உரிமைக்காக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பக உறுப்பு நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றனர்.
ALSO READ | கோவை தற்கொலை: மாணவி அடையாளங்களை வெளியிட்ட 48 வலைதளங்கள் மீது POCSO பாய்ந்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR