பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் KS அழகிரி தெரிவித்துள்ளார்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தியோடு மறைந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 7 பேரையும் விடுதலை செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரம் மீண்டும் ஆளுநரிடமே சென்றுள்ளது.
இதற்கிடையில் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தன் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் ஆளுளர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் KS அழகிரியிடம் கேட்டபோது, 7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டோம் என கட்சி தலைமை ஏற்கனவே தெரிவித்து விட்டது., எது நடந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.