கபினி அணையின் நீர்திறப்பு காரணமாக ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 21000 கனஅடி-யாக அதிகரித்துள்ளது!
தென்இந்திய மாநிலங்களில் பொழிந்து வரும் தொடர் மழை காரணமாக கபினி அணையின் நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தரும்புரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் அருவியில் நேற்று 1600 கனஅடி வீதம் நீர்வரத்து காணப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 21000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஒகேனக்கல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல்களை இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல் துறை அருகிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். ஆற்றுப்பகுதியை பார்வையிட்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் கர்நாடகத்தில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 23000 கனஅடி-யாக உயர்ந்தது. இதனையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கும், பரிசல்களை இயக்குவதற்கும் 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.