தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து வாசித்த கட்டுரைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை உள்ளிட்டோரும், அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வன், மைத்ரேயன் உள்ளிட்ட தலைவர்களும் வைரமுத்துவை விமர்சித்தனர்.
இதில் ஹெச்.ராஜா மிகவும் கடுமையான சொற்களால் வைரமுத்துவை விமர்சித்தார். கேட்பவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் அந்த விமர்சனம் இருந்தது. ஹெச்.ராஜாவின் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது என்று தனது அறிக்கையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை இழிசொற்களால் எப்படி பேசலாம்? வைரமுத்து என்பவர் தனிமனிதல்ல தமிழினத்தின் பெரு அடையாளம் என்பதை விமர்சிப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடை தோறும் முழங்கி அவர்களின் பெருமைகளை பட்டியலிடும் கவிஞனை எப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசுவது என்று பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ஹெச்.ராஜாவை போன்ற மனிதர்களால் தான் இந்தியா துண்டாடப்பட போகிறது என்ற அச்சம் தனது வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.