இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கொரோனா தடுப்பூசியின் (Corona Vaccine) மூன்றாம் கட்டம் மே 1 முதல் தொடங்குகிறது. இதற்கான பதிவு செயல்முறை புதன்கிழமை (ஏப்ரல் 28) நான்கு மணிக்கு தொடங்கியுள்ளது. மூன்றாம் கட்டத்தில், 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும்.
இந்நிலையில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு புதிதாக கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்னும் பெறப்படவில்லை என, ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்தார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் (Radhakrishnan) செய்தியாளர்களை சந்தித்துப் கூறியதாவது.,
ALSO READ | கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி அறிய ட்விட்டர் கணக்கு அறிமுகம்!
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா (Coronavirus) தடுப்பூசி போடும் திட்டம் திட்டமிட்டபடி நாளை தொடங்குமா என்பது சந்தேகம் தான். ஆர்டர் கொடுத்த தடுப்பூசிகள் எப்போது தமிழகம் வந்து சேரும் என்பது தெரியவில்லை. எனவே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஏற்கெனவே உள்ள தடுப்பு மருந்துகள் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்காக வைத்திருக்கிறோம். புதிதாக ஆர்டர் செய்துள்ள மருந்துகள் எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இதே பிரச்சினை இருக்கிறது. இதனை நாங்கள் ஏன் வெளிப்படையாக சொல்கிறோம் என்றால், நாளை தடுப்பூசி போட தொடங்கினீர்களா என கேட்பீர்கள். சீரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். ஒன்றரை கோடி மருந்துக்கு நாம் ஆர்டர் செய்தாலும், அதில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. சுமார் 68 லட்சம் வந்திருக்கிறது. அதில், 56-57 லட்சம் செலவழித்திருக்கிறோம். மீதம் கையிருப்பில் உள்ளன. 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு நிறுவனங்களிடமிருந்து கையிருப்பு வந்தால்தான் தடுப்பூசி செலுத்த முடியும் இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR