வரும் ஜூன்-10 தேதி முதல் கேவை-பெங்களூரு வழித்தடத்தில் இரட்டையடுக்கு தொடர்வண்டி சேவை துவங்கப்படவுள்ளது!
அதிவேக புதிய இரட்டை அடுக்கு தொடர்வண்டிகளை உதய் எக்ஸ்பிரஸ் பெயரில் இந்திய ரயில்வே துறை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது வரும் ஜூன்-10 தேதி முதல் கேவை-பெங்களூரு வழித்தடத்தில் இரட்டை அடுக்கு தொடர்வண்டி இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதய் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோயம்புத்தூர்-பெங்களூரு, பாந்த்ரா-ஜம்நகர் மற்றும் விசாகப்பட்டினம்-விஜயவாடா ஆகிய மூண்று வழித்தடங்களில் பயணிக்க உள்ளது.
உதய் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் உட்கிரிஷ்ட் டபுள் டெக்கர் ஏர்-கண்டிஸன் எக்ஸ்பிரஸ் ரெயில்வே திட்டமானது 2016-2017 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் முதல் தொடர்வண்டி சோதனை ஓட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் நாள் அன்று வெறும் மூன்று பெட்டிகள் கொண்டு மணிக்கு 80 கி.மீ. எனும் வேகத்தில் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது.
பின்னர் இரண்டாவது சோதனை ஓட்டம் டிசம்பர் 5-ஆம் தேதி கோயம்புத்தூர்-பெங்களூரு வழித்தடத்தில் சுமார் 100 கி.மீ வேகத்தில் 235 கி.மீ. தொலைவுக்கு ஓட்டப்பட்டது.
இதன்மூலம், உதய் எக்ஸ்பிரஸ் ரெயில்வேயில் உள்ள ஒன்பது மற்ற இரட்டை ரக ரயில்களின் பட்டியலில் விரைவில் இணையவுள்ளது.
கோயம்புத்தூர்-பெங்களூரு வழித்தடத்தில் முதலாவதாக உதய் எக்ஸ்பிரஸின் முதல் ஓட்டம் இயக்கப்படவுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு, பெங்களூரில் பிற்பகல் 12.40 மணிக்கு சென்றடையும். ஆக மொத்தம் ஏழு மணிநேர பயண நேரத்தினை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், பெங்களூரு-கோயமுத்தூர் வழித்தடமானது... பெங்களூரிலிருந்து பிற்பகள் 2:15 மணிக்கு துவங்கி கோயம்புத்தூரை இரவு 9:00 மணியளவில் அடையும்.