போக்குவரத்து தொழிலாளர் விவகாரம்: முதல்வரிடம் பேசினார் ஸ்டாலின்!

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Last Updated : Jan 6, 2018, 02:29 PM IST
போக்குவரத்து தொழிலாளர் விவகாரம்: முதல்வரிடம் பேசினார் ஸ்டாலின்! title=

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. பேருந்து இயக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

பணிக்குத் திரும்பவில்லை என்றால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயர்நீதிமன்றம் நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

அப்போது போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய ஸ்டாலின், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Trending News