வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது..!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழை கடந்த மாத இறுதியில் தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரு நாள்களுக்கான மழை பற்றிய முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... “தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) மதுரை, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரையில் மழை பெய்யக்கூடும்.
ALSO READ | Unlock 5.0: தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களில் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறப்பு!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 8 செ.மீ. மழையும், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணைப்பகுதியில் 7 செ.மீ. மழையும், அமராவதி அணை, உடுமலைப்பேட்டை, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 4 செ.மீ. மழையும், தேனி மாவட்டம் பெரியகுளம், கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.