கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை என்ற புதிய சட்டத்தைக் கொண்டு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தமிழர்களுக்கு வேலை என்ற புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளை கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு ஏற்கனவே கொண்டு வந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதைப் பாதுகாப்பதற்காகவே இச்சட்டத்தை கர்நாடகம் கொண்டு வருகிறது.
கர்நாடக அரசு கொண்டு வரவிருக்கும் புதிய சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சம உரிமை, 16-வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சம வாய்ப்பு உரிமை ஆகியவற்றுக்கு ஆதரவானதா? இல்லை எதிரானதா? என்பதெல்லாம் ஆழமான விவாதிக்கப்பட வேண்டியவை.
கர்நாடக அரசின் இந்நடவடிக்கை மற்ற மாநிலங்களுடனான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் விவாதத்திற்குரியதே. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒற்றை இந்தியா என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் சரியா? என்று வினா எழுப்புவதை விட, தவறல்ல என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கன்னடத்தை ஒரு பாடமாக படித்தவர்களும், கர்நாடகத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வாழ்ந்து கன்னடத்தில் எழுதப் பேசத் தெரிந்தவர்களும் கன்னடர்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் பணி நிமித்தமாக நீண்ட காலம் வெளிநாட்டிலோ, வெளி மாநிலங்களிலோ பணியாற்றி விட்டு, சொந்த மாநிலத்திற்கு திரும்பும்பட்சத்தில் அவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படாத வகையில் சில விதிவிலக்குகளை கொண்டு வரவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதனால் கர்நாடக தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கான வேலைவாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும்.
தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றில் பணியாற்றுபவர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைச் சேராத மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தனியார் நிறுவனங்களிலும், பெரு நிறுவனங்களிலும் உயர்பதவிகளில் இருப்பவர்கள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள் முடிந்தவரை தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையே சி மற்றும் டி பிரிவு பணிகளில் அமர்த்துகின்றனர். இத்தகைய சூழலில் தமிழர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.
கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தால், தமிழர்களின் வேலைவாய்ப்பு மிகக்கடுமையாக பாதிக்கப்படும். தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
கன்னடர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளில் தமிழர்களுக்கு 100% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் தமிழக அரசு விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.