கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் 2000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரும்புக்கான குறைந்தபட்ச விலை டன் ஒன்றுக்கு 250 ரூபாய் உயர்த்தி மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு போதாது என்ற சூழ்நிலையில் மாநில அரசு கரும்பு டன் ஒன்றுக்கு கொள்முதல் விலையை 3500 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்.
கரும்பு விவசாயிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் கரும்பு விவசாயிகளுக்காக அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாக ஏற்று அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
மாநிலத்தில் வெள்ளம், புயல், வறட்சி போன்றவற்றால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரும்பு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையால் கரும்பு விவசாயமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கரும்புக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள விலை உயர்வு போதாது, நியாயமற்றது என்ற சூழலில், கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை உடனடியாக அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆகவே கூட்டுறவு மற்றும் தனியார் கரும்பு ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் 2000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வழங்குவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.