தமிழக அரசு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எதுகுறைவோ அது வழங்கப்படும்.
வாகனத்தை பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம். 125 சி.சி. திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும். பணிபுரியும் பெண்கள், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு பெற்ற பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாக தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத்திட்டங்களில் பணியாற்றும் பெண்கள், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றும் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை பெற விண்ணப்பிக்கலாம்.
18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது ஆண்டுவருமான அளவு ரூ.2½ லட்சத்தை தாண்டக்கூடாது. மிகவும் பின் தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகள், கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை தாண்டி திருமணமாகாத பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் இலவசமாக கிடைக்கும். இன்று முதல் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்படும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 5-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
விண்ணப்பிப்பவர்கள் வயதுக்கான சான்றிதழ், இருப்பிடச்சான்று, ஓட்டுனர் உரிமம், வருமான சான்றிதழ், வேலையின் தன்மை குறித்த சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதி சான்றிதழ், ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.