இன்று (14.11.2017) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், 199 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 125 தட்டச்சர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
பணிநியமன ஆணை குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பேட்டில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (14.11.2017) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 199 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 125 தட்டச்சர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்
தமிழகத்திலுள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கிட, கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டப் பொருட்கள் வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மாணாக்கர்கள் தங்குதடையின்றி கல்வி கற்றிட காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பள்ளிக்கல்வித் துறையின் திட்டப் பணிகளை சீரிய முறையில் செயல்படுத்திட ஆசிரியரல்லாத இதர காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு
திட்டங்களை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 199 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 125 தட்டசர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து, இன்றைய தினமே மீதமுள்ள நபர்களுக்கும், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களாலும், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் நியமனம் செய்யப்பட்ட தட்டசர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களாலும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் முனைவர் ரெ. இளங்கோவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.