தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!!
காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியால் விலகி வந்து தமாகா கட்சியை ஆரம்பித்த ஜி.கே.மூப்பனார். அண்ணாமலை படத்தில் ரஜினி சைக்கிள் சவாரி போகும் படத்தை அக்கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுக்க விரும்பினார். அதேப்போல் கடந்த 1996 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தை பயன்படுத்தியது.
2001-ல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாக தலைவரானார். பின்னர் 2002-ஆம் ஆண்டு தமாகா கட்சி இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைந்து விட்டது. பின்னர் மீண்டும் காங்கரஸ் கட்சி தலைமையுட் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். இரண்டாவது முறையாக துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வரும் மக்களவை தேர்தலில் தாய் சின்னமான சைக்கில் சின்னத்தில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தஞ்சை தொகுதியை மட்டுமே அதிமுக ஒதுக்கியுள்ளது. தஞ்சை மக்களவை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என்.ஆர். நடராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சைக்கில் சின்னம் நிரந்தரம் இல்லை எனவும், தனி சின்னம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதை தங்கள் கட்சியின் பொதுச்சின்னமாக ஒதுக்க உத்தரவிடக்கோரி த.மா.கா மூத்த தலைவரும், வழக்கறிஞருமான ஞானதேசிகன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். அதில், தங்கள் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்ததால் சின்னம் பறிபோனதாகவும், தங்களின் வாக்கு சதவிகிதம் குறைந்ததால் திரும்பப் பெறப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். சைக்கிள் சின்னத்தை கட்சியின் பொதுச் சின்னமாக ஒதுக்க வேண்டும் என தமாகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உச்சநீதி மன்றம், தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை எனவும் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என கூறி மனு தள்ளுபடி செய்தது.