அதிமுகவுக்கான ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்!!
சமீபத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை என்று கூறியிருந்தார். மேலும், 2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
ராஜன் செல்லப்பாவின் இந்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் அதிமுகவுக்கான ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில்; அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும். அ.தி.மு.க.வில் பிளவு என்பதே இல்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் வேண்டுகோளின்படி அ.தி.மு.க.வினர் பொதுவெளியில் எவ்வித கருத்துகளும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.
கட்சியில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம், பொதுவெளியில் கூடாது. ஒற்றைத்தலைமை தொடர்பாக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்ய முடியாது. திமிங்கலங்களை போல் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கலைக்க நினைக்கிறார்கள். அண்ணா கூறியபடி துண்டு என்பது பதவி; வேட்டி என்பது மானம் போன்றது; எங்களுக்கு வேட்டிதான் முக்கியம்" என தெரிவித்தார்.