தொடர்ந்து துரத்தும் சுங்கச்சாவடி சர்ச்சை...‘பகீர்’ கிளப்பும் சசிகலா

Thuvakudi Tollgate Sasikala Car Issue :  நள்ளிரவில் வி.கே.சசிகலாவின் ஆதரவாளர்களின் கார் டோல்கேட்டை கடக்கிறது. எந்தப் பிரச்சனையும் இல்லை. சரியாக, சசிகலாவின் கார் கடக்கும் போது மட்டும் அது நடப்பது எப்படி ? சந்தேகம் அடைந்த சசிகலா ? நள்ளிரவில் போராட்டம்!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 9, 2022, 03:20 PM IST
  • துவாக்குடி டோல்கேட்டும், சசிகலா காரும்!.
  • நள்ளிரவில் துவாக்குடி டோல்கேட்டில் சசிகலா போராட்டம்
  • சம்பவ இடத்திற்கு வந்து மன்னிப்புக் கேட்ட டோல்கேட் மேலாளர்
தொடர்ந்து துரத்தும் சுங்கச்சாவடி சர்ச்சை...‘பகீர்’ கிளப்பும் சசிகலா title=

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்றுகொண்டிருந்தார். சரியாக இரவு 11.45 மணிக்கு துவாக்குடி சுங்கச்சாவடியில் அவரது கார் வந்தது. முதலில் சசிகலாவின் ஆதரவாளர்களின் கார்கள் டோல்கேட்டைக் கடக்கும் போது எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை. சரியாக, சசிகலாவின் கார் டோல்கேட்டைக் கடக்கும் போது, வாகனங்களைத் தடுக்கும் தடுப்புக் கம்பி சசிகலாவின் கார் கண்ணாடியில் மோதியது. 

மேலும் படிக்க | சுற்றுப் பயணத்தில் கைகோர்க்கும் ஓபிஎஸ் - சசிகலா? தேனியில் முக்கிய முடிவு

இதனால் கோபம் அடைந்த சசிகலா, தனது காரை சிறிது தூரம் முன்னே சென்று நிறுத்தியுள்ளார். உடனடியாக அவரது ஆதரவாளர்களும் சுங்கச்சாவடியில் உள்ள கட்டண நுழைவு வாயில்களில் கார்களை நிறுத்தி, டோல்கேட் ஊழியர்களைத் தேடினர். அவர்கள் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. 

உடனடியாக சம்பந்தப்பட்ட துவாக்குடி சுங்கச்சாவடி மேலாளர் வரவேண்டும் என கூறிய சசிகலா, தனது ஆதரவாளர்களுடன் காரில் அமர்ந்தபடியே போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அந்த நேரம் பார்த்து, திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் போலீஸார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுது, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துவாக்குடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் சசிகலா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால், அது பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத்ரெட்டி சம்பவ இடத்திற்கு வர வழைக்கப்பட்டார். சசிகலா தரப்பிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அவர், இதுபோல் நடந்ததற்கு மன்னிப்புக் கேட்டார். இதேபோல், துவாக்குடி சுங்கச்சாவடியில் தனக்கு மூன்று முறை நடந்துவிட்டதாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோல் நடப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் அப்போது சசிகலா தெரிவித்தார். 

இதனைக் கேட்ட போலீஸார், ‘இந்தப் பிரச்சனை குறித்து நீங்கள் வேண்டுமானால் எழுத்து பூர்வமாக புகார் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றனர். 

அதற்கு சசிகலா தரப்பினர் புகார் கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால், சசிகலா காரை விட்டு இறங்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு நள்ளிரவு 1:15 மணிக்கு போராட்டத்தைக் கைவிட்டு சசிகலா புறப்பட்டுச்சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கிளம்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் சுமார் ஒன்றரை மணி நேரம் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | பொதுக்குழு கூட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ; இபிஎஸ் - ஓபிஎஸ் இப்படி மோதிக்கொள்ள என்ன காரணம்?

இச்சம்பவம் குறித்துப் பேசிய சுங்கச்சாவடி தரப்பினர், விஐபி செல்லும் வழியில் சசிகலா வராமல் நார்மலாக செல்லும் பொது வழியில் வந்தார் என்றும் அதனால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்து விட்டதாகவும் கூறினர். 

சசிகலா ஆதரவாளர்களிடம் விசாரித்த போது, எப்போதுமே சசிகலா விஐபி வழியே வந்ததில்லை என்றும், பொது வழியில் தான் செல்வார் என்றும் கூறினர். எந்த டோல் ப்ளாசாவிலும் இதுபோல் சம்பவங்கள் நிகழவில்லை என்றும், துவாக்குடி டோல் பிளாசாவில் மட்டும்தான் இது மூன்றாவது தடவையாக சசிகலாவுக்கு நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். எனவே, துவாக்குடி காவல் நிலையத்தில் முறைப்படி இதுதொடர்பாக புகார் கொடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News