'வந்த வழியே திரும்பி செல்லுங்கள்' - ஆர்எஸ்எஸ்-க்கு எச்சரிக்கை விடுத்த திருமா!

விசிக ஒருங்கிணைத்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்த்து கீ.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் உரையாற்றினர். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 11, 2022, 09:31 PM IST
  • அக். 2ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஆர்எஸ்எஸ் பேரணியை விசக உள்பட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி ஒத்திவைக்கப்பட்டது.
  • அதை எதிர்க்கும் விதமாக எதிர்கட்சிகள் மனித சங்கிலி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'வந்த வழியே திரும்பி செல்லுங்கள்' - ஆர்எஸ்எஸ்-க்கு எச்சரிக்கை விடுத்த திருமா! title=

தமிழ்நாடு முழுவதும் இன்று (அக். 11) மாலை நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போரில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பால் தமிழ்நாடு முழுவதும் இன்று இந்த பேரணி நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 26 கட்சிகள் மற்றும் 44 அமைப்புகள் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி அறப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சனாதன கும்பலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

VCK

மேலும் படிக்க | "இந்தி" நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் -சீமான் எச்சரிக்கை

'இது  முடிவல்ல துவக்கம்'

அதன்பின்னர், அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் பேசிய கி.வீரமணி,"தமிழ்நாடு பெரியார் மண்; தமிழ்நாடு மதவாதத்திற்கு இடம் தராத மண் என்று இன்று உணர வைத்துள்ளது. இது ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. தமிழ் மண்ணில் ஆர்எஸ்எஸ் ஒருபோதும் நுழைய விட மாட்டோம் என்பதற்கான எச்சரிக்கை இந்த மனித சங்கிலி. நச்சு கிருமிகள் உள்ளே நுழைந்து மதவாதத்தை பரப்பி வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டால் அதனை தடுப்போம். இது  முடிவல்ல துவக்கம்" என்றார்.

'வேரோடு சாய்ப்போம்'

அடுத்த பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,"விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எடுத்த முயற்சியின் காரணமாக அனைத்து கட்சிகள் சார்பில் இந்த மனித சங்கிலி அறப்போர் வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தி நாசத்தை  விளைவிக்க நினைக்கும் கும்பலுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதற்கு இந்த மனித சங்கிலி  போராட்டம் நிரூபித்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் சனாதன சக்திகள் காலூன்ற முடியாது, காலூன்ற விடமாட்டோம். சனாதன சக்திகளை வேரோடு சாய்க்க இதுபோன்ற போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்" என்றார். 

'ஆர்எஸ்எஸ் ஒரு சராசரி இயக்கமல்ல'

தொடர்ந்து தொல். திருமாவளவன்,"சனாதன சக்திகளுக்கு எதிராக தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம். தமிழ்நாடு அவர்கள் நினைப்பதைப் போல ஏமாளிகள் இருக்கும் மாநிலம் அல்ல, இது பெரியாராலும் அண்ணாவாலும் திராவிட இயக்கங்களாலும் பண்படுத்தப்பட்ட மண்.

சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகின்ற சங்பரிவார் கும்பலின் சதி வலைகளை முறியடிப்போம். சனாதன சக்திகள் இங்கே வாலாட்டலாம், காலூன்றலாம், வேரூன்றலாம் என்று நினைக்கக் கூடாது. வந்த வழியே திரும்பி செல்லுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கின்றோம்.

ஆர்எஸ்எஸ் என்பது ஒரு சராசரி ஜனநாயக இயக்கம் அல்ல. அந்த இயக்கத்தின் அணி வகுப்பிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி அளித்தால் அதனை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்" என முழக்கமிட்டார். 

மேலும் படிக்க | தம்பியை தொடர்ந்து அண்ணனும்.. தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News