தொடர்வண்டிகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - PMK

தொடர்வண்டித்துறையை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கச் செய்து, அதை லாபத்தில் இயக்குவதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும்..!

Last Updated : Jul 3, 2020, 12:12 PM IST
தொடர்வண்டிகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - PMK title=

தொடர்வண்டித்துறையை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கச் செய்து, அதை லாபத்தில் இயக்குவதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும்..!

இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..... தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தனியார் தொடர்வண்டி  சேவைகள் தொடங்கப்படும் என்று தொடர்வண்டி வாரியத் தலைவர் வி.கே.யாதவ் அறிவித்திருக்கிறார்.  இது ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரிடமிருந்து தொடர்வண்டி சேவையை பறிக்கும் செயலாகும்.

தில்லியிலிருந்து காணொலி மூலமாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொடர்வண்டி வாரியத் தலைவர் வி.கே. யாதவ், நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 தொடர்வண்டிகள் தனியார்மயமாக்கப்  பட இருப்பதாக தெரிவித்தார். இந்தத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, புதுதில்லி, கொல்கத்தா, ஜோத்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 14 தொடர்வண்டிகள், புதுவையிலிருந்து சென்னை வழியாக செகந்திராபாத், கன்னியாகுமரியிலிருந்து எர்ணாகுளம், கோவையிலிருந்து திருநெல்வேலி செல்லும் தொடர்வண்டிகள்  உட்பட தமிழ்நாட்டுக்குள் இயங்கும் தொடர்வண்டிகள், தமிழ்நாட்டை கடந்து செல்லும் தொடர்வண்டிகள்  என மொத்தம் 24 தொடர்வண்டிகள் தனியார்மயமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்வண்டிகள் தனியார்மயமாக்கப்பட்டால் பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் கிடைக்கும்; செல்ல வேண்டிய இடத்தை மிகவும்  குறைந்த நேரத்தில் சென்றடைந்து விடலாம் என்று மக்களை மயக்கும் வகையில் செய்திகள் பரப்பப்படுகின்றன. அதேநேரத்தில் தொடர்வண்டிகளை தனியார்மயம் ஆக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. இப்போது வசூலிக்கப்படும் பயணிகள் கட்டணத்தில் சராசரியாக 47 விழுக்காடு மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ரூ.42,000 கோடி இழப்பை, சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் லாபத்திலிருந்து ரயில்வே துறை ஓரளவு சமாளிக்கிறது. தனியார் ரயில்கள் இயக்கப்படும் போது இந்த ரூ.42,000 கோடி இழப்பும் பயணிகள் தலையில் சுமத்தப்படும். இதற்காக ரயில் கட்டணம் 28% முதல் 244% வரை உயர்த்தப்படும். அதுமட்டுமின்றி, தொடர்வண்டிக் கட்டணங்களை நிர்ணயிக்க தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவிருப்பதால், அவை அளவுக்கு அதிகமாக கட்டணங்களை நிர்ணயித்து கொள்ளையடிக்கும். இந்த உயர்வை அடித்தட்டு மக்களால் தாங்க முடியாது.

READ | தமிழகத்தில் 14 வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்படும் -முழுவிவரம்

இந்தியாவைப் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தொடர்வண்டி சேவைகள் என்பது மிகப்பெரிய வரம் ஆகும். பேருந்துகளுடன் ஒப்பிடும் போது மிகக்குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கு தொடர்வண்டி சேவைகள் மட்டும் தான் ஒரே வாய்ப்பாகும். ஒருபுறம்  கிளை வழித்தடங்களில் இயக்கப்படும் தொடர்வண்டி சேவைகளை நிறுத்துவதற்கும், முக்கிய வழித் தடங்களில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் சாதாரண பயணியர் வண்டிகளை அதிக கட்டணம் வசூலிக்கப்படும் விரைவுத் தொடர்வண்டிகளாக மாற்றுவதற்கும் ஆணையிட்டுள்ள தொடர்வண்டி வாரியம், இப்போது தொடர்வண்டிகளை தனியார் மயமாக்கினால், அதில் பயணம் செய்வது குறித்து ஏழைகள்&  நடுத்தர மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இது ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

அதுமட்டுமின்றி, 151 தொடர்வண்டிகள் தனியார்மயமாக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும். இவை எதுவுமே தொடர்வண்டித் துறையின் வளர்ச்சிக்கோ, மக்களின் முன்னேற்றத்திற்கோ வழிவகுக்காது. தனியார் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பதற்கு மட்டும் தான் வழிவகுக்கும். தொடர்வண்டித்துறையை லாபத்தில் இயக்க தனியார் மயமாக்கல் மட்டுமே ஒரே வழியல்ல. அவற்றைக் கடந்து ஏராளமான வழிகள் உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை இணையமைச்சர்களாக இருந்த போது தொடர்வண்டித்துறை லாபத்தில் இயங்கியது. அதற்கு முந்தைய 16 ஆண்டுகளில் தொடர்வண்டித்துறைக்கு மொத்தம் ரூ.61,000 கோடி கடன் சுமை இருந்தது. அதுமட்டுமின்றி அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பல்லாயிரம் கோடி இருந்தது. அவை அனைத்தையும் செலுத்திய பிறகு 2009&ஆம் ஆண்டில் பா.ம.க. அமைச்சர் பதவி விலகிய போது இந்தியத் தொடர்வண்டித் துறையிடம் ரூ.89,000 கோடி உபரி நிதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவையும் கடந்து இந்திய வரலாற்றில் முதன்முறையாக தொடர்வண்டிக் கட்டணங்கள் குறைக்கப்பட்டன;  இன்று வரை அச்சாதனை முறியடிக்கப்படவில்லை.

எனவே, தொடர்வண்டித்துறையை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கச் செய்து, அதை லாபத்தில் இயக்குவதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். தொடர்வண்டி சேவைகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசும், தொடர்வண்டி வாரியமும் கைவிட வேண்டும். 

Trending News