தமிழகத்தில் மது கடைக்கு எதிராக தொடரும் பொதுமக்களின் போராட்டம்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மது கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டு, அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் புதிய மது கடைகள் தொடங்கியது தமிழக அரசு.
ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் தினமும் மது கடைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் அரங்கேறி வருகிறது.
திருப்பூர் அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியில் கல்லூரி அருகில் டாஸ்மாக் மது கடை பாருடன் செயல்பட்டு வருகிறது. இந்த மது கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் திருப்பூர் கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த மது கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், 500-க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டனர். அவர்கள் திருப்பூர் - காங்கயம் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரவில்லை. திடீரென ஆத்திரமடைந்த அவர்கள் கடைக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர். அங்கிருந்த பாட்டில்கள், சேர்கள், டேபிள்கள் அனைத்தையும் சுக்கு நூறாக நொறுக்கினர். கடையின் கூரைகளையும் அடித்து நொறுக்கினர். இதையடுத்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிரடி படை போலீசார் விரைந்து சென்றனர்.
அவர்கள் பொதுமக்களை சமாதான செய்ய முயற்சி செய்தனர். ஆனால் பொதுமக்கள் மதுக்கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என கூறி சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மறியல் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மதுக்கடையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.