24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது...!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல இடங்களில் மழை பெய்தது. திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பரவலாக கொட்டியது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. ஆகையால் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது... நாளை ( 05.08.2020 ) கோவை நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் மழை இருக்கும். குறிப்பாக மேற்கு மலை தொடரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும்.
நெல்லை, தென்காசி, தேனி, குமரி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையானது 34 டிகிரி செல்சியசையே ஒட்டி இருக்கும். குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும். கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | அப்போ உங்க குழந்தைகள் மட்டும் 3 மொழி பள்ளியில் சேர்க்கலாமா? - H.ராஜா
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை ( 5 .8. 2020 ) இரவு 11 .30 மணி வரை கடல் அலை 3.1 முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக்கூடும். ஆகஸ்டு 4 மற்றும் 5 தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆகஸ்டு 4 முதல் ஆகஸ்ட் 6 வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு ,மகாராஷ்டிரா, கோவா கடலோர பகுதிகள், தென்மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.