ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக வாக்காளர்கள் ஆளுங்கட்சி கூட்டணிக்குப் பாடம் புகட்டியுள்ளனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் - தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். ஆளுங்கட்சிகளான அதிமுக-பாஜக கூட்டணியின் மாபெரும் அதிகாரவலிமை உள்ளிட்ட அனைத்து வலிமைகளையும் மீறி, திமுக கூட்டணிக்கு தமிழ்ச்சமூகம் மிகப்பெரும்பான்மையான சதவீத அளவில் மகத்தான வெற்றியை வழங்கியிருப்பது, அதிமுக கூட்டணிக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலின்போது நிலவிய அதே ‘எதிர்ப்புநிலை’ தொடர்ந்து நீடிப்பதை உணர்த்துகிறது. அதேவேளையில், திமுக கூட்டணியின் மீதான நன்மதிப்பும் நம்பிக்கையும் மிகவலிமையாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இக்கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி , “ 31 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும் 40க்கும் மேற்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் “ வெற்றிப்பெற்றுள்ளனர். இத்தகைய கணிசமான வெற்றியை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணிக்கு வழங்கியுள்ள தமிழக மக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக வாக்காளர்கள் ஆளுங்கட்சி கூட்டணிக்குப் பாடம் புகட்டியுள்ளனர்!#CAA க்கு ஆதரவளித்துள்ள அதிமுகவுக்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் பாடம் புகட்டும்வகையிலும் இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இனிமேலாவது அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறோம் pic.twitter.com/HHymPsQXNs
— Thol.Thirumavalavan (@thirumaofficial) January 5, 2020
தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிபெற்ற பல இடங்களில் முடிவுகளை அறிவிப்பதில் திட்டமிட்டே காலம்தாழ்த்திப் பின்னர் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றதாக அறிவித்துள்ளனர். அவற்றை எதிர்த்து மக்கள்போராட்டங்கள் நடந்துள்ளன. நீதிமன்றங்களை நாடி நீதியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் போராடியவர்களுக்கு விடையளித்துள்ளனர். ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையரை நள்ளிரவில் சந்தித்து மனு கொடுத்ததை நாடு அறியும். இவ்வாறான அடாவடிகளையெல்லாம் தாண்டி திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருப்பது பெருமகிழ்வை அளிக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்துள்ள அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்குப் பாடம் புகட்டும்வகையிலும் இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. எனவே, இனிமேலாவது அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறோம். அத்துடன், இம்முடிவுகளிலிருந்து படிப்பினையாக குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு, தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவற்றைப் புறக்கணித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமென்றும் நம்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.