பருவமழை பொய்த்து, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்ட போதிலும், தமிழகம் முழுவதும் முடிந்தவரை தண்ணீர் வழங்கி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில், குடிநீர் பிரச்சினை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசினார். அப்போது தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தமிழக அரசு தான் முக்கிய காரணம் என குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் பருவமழை பொய்த்து, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்ட போதிலும், தமிழகம் முழுவதும் முடிந்தவரை தண்ணீர் வழங்கி வருவதாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர்., காங்கிரஸ் உறுப்பினர் இங்கு குற்றச்சாட்டுகளையே கூறிக்கொண்டுள்ளார். அவரிடன் நான் ஒன்று கோட்க விரும்புகிறேன். உங்கள் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவரின் பதில் என்ன? என்று நான் பலமுறை கேட்டுள்ளேன். அதற்கு பதில் இல்லை. இப்போது உங்களிடமும் கேட்கிறேன்.
ராகுல் காந்தி பேசியதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள். இப்போதே நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது நமக்கு தர வேண்டிய 24 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு தாருங்கள் என்று கேட்டேன். இது தொடர்பாக கடிதமும் எழுதினேன். நான் நேரில் வந்து சந்திப்பதாக கூறினேன். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
கர்நாடகாவில் உங்கள் கூட்டணி கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது. எனவே, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்று கூறிய ராமசாமி, இதற்காக தனி குழு அமைத்து அதில் எதிர்கட்சி உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தண்ணீர் பஞ்சம் என்பது அனைவருக்குமான பிரச்சனை என்று கூறிய முதல்வர், காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்துக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது தான் தன்னுடைய கேள்வி என்று குறிப்பிட்டு பேசினார்.