“நதி நீர் பாதுகாப்பு கமிட்டி” தமிழக அரசு அமைக்க வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை

Last Updated : Jun 16, 2017, 11:51 AM IST
“நதி நீர் பாதுகாப்பு கமிட்டி” தமிழக அரசு அமைக்க வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை title=

அண்டை மாநிலங்களில் ஆற்று நீர் தடுக்கப்படுவதை கண்காணிக்க “நதி நீர் பாதுகாப்பு கமிட்டி” ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-

தமிழகத்திற்கு வரும் தண்ணீரை மனிதாபிமானம் இன்றித் தடுக்கும் வகை யில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அடுத்தடுத்து தடுப்பணைகளை கட்டி வருவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாலாற்றின் குறுக்கே 22 க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படுவதும், அவற்றின் உயரம் அதிகரிக்கப்படுவதும் தமிழக விவசாயிகளுக்கு, ஆந்திர மாநில அரசு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்.

தமிழகத்திற்கு கிடைக்கும் பாலாற்று நீரை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில், அண்டை மாநில உறவுகள் பற்றி துளியும் கவலைப்படாமல் ஆந்திர அரசு செயல்படுவதும், அதை கையாளாகாத அதிமுக அரசு கண்டு கொள்ளாமல், அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பதும் வேதனையளிக்கிறது.

வேலூர் மாவட்டத்திற்குள் உள்ள கங்குந்தி பகுதியில் இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் இருந்த தரைப்பாலத்தை திடீரென்று 36 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கும் மேம்பாலமாக ஆந்திர அரசு மாற்றி வருகிறது பேரதிர்ச்சியளிக்கிறது. பாலாற்றின் குறுக்கே இருக்கும் தடுப்பணைகளின் உயரத்தை எல்லாம் அதிகரிக்க ஆந்திர மாநில அரசு அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்து வருவதும் கவலையளிக்கிறது.

1892 ஆம் ஆண்டு “சென்னை- மைசூர்” ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையில் பாயும் 15 நதிகளில் பாலாறும் ஒன்று என்பதும், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டுவது ஒப்பந்தத்தை மீறிய செயல் என்பதையும் ஆந்திர மாநில அரசு உணர மறுக்கிறது.

தமிழகத்திற்கு வர வேண்டிய பாலாற்று நீரை தடுக்கக்கூடாது என்பது ஒப்பந்தத்தின் நோக்கமாக இருந்தும், அடாவடியாக தடுப்பணைகளை கட்டும் பணியில் ஆந்திர அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆந்திர முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடு அவர்கள், தான் போட்டியிட்டு வெற்றிபெற்ற குப்பம் தொகுதியை செழிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மாநிலத்திற்கே பயன்பட வேண்டிய தண்ணீரை, தன்னுடைய ஒரு தொகுதிக்காகத் தடுப்பது படுபாதகமான செயல்.

தன் தொகுதி விவசாயிகளின் நலனைக் காப்பாற்ற, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் ஆந்திர மாநில முதலமைச்சரின் நடவடிக்கைகளை தமிழக  முதலமைச்சர் தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பாலாற்று நீரை நம்பியிருக்கும் விவசாயிகளை பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விவசாயிகளே தடுப்பணை கட்டும் இடத்திற்கு சென்றுத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டும், அதிமுக அரசு நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.

சென்றமுறை இதேமாதிரி பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்ட போது, 19.7.2016. அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என் தலைமையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த “ஆர்பாட்ட அறிவிப்பு” வெளிட்டவுடன் 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த அதிமுக அரசினால், பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு தடை பெற முடியவில்லை. அந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்தவும் இல்லை. 

தங்களுக்குள் நடக்கும் பதவி சண்டையில் மாநில விவசாயிகள் நலனை மறந்துவிட்ட அதிமுக அரசு, ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியாவது தடுப்பணைகள் கட்டும் பணியை நிறுத்த முடியவில்லை. தடுப்பணைகள் கட்டும் நிலை இப்படியே தொடர்ந்தால், பாலாற்றின் மூலம் தமிழகத்திற்கு ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்காது என்ற மிக ஆபத்தான கட்டம் வந்து விட்டது.

இது தவிர, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் நிலைப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு, மேகதாது உள்ளிட்ட 4 இடங்களில் தமிழகத்திற்கு வரும் காவிரி தண்ணீரை முற்றிலுமாக தடுக்கும் விதத்தில் அணைகளை கட்ட கர்நாடக மாநில அரசு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய மேட்டூர் அணையின் கொள்ளவுக்கு இணையாக பல அணைகளைக் கட்டி, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வஞ்சக எண்ணத்துடன் கர்நாடக மாநில அரசு செயல்படு கிறது. இதையும் முறைப்படி மத்திய அரசை அணுகியோ, உச்சநீதிமன்றத்தை அணுகியோ அதிமுக அரசு தடுக்க முயலவில்லை.

பதவியை தக்க வைத்துக் கொள்ளவே தினமும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருப்பதும், நிலையற்ற, செயலற்ற அரசு தமிழகத்தில் அமர்ந்திருப்பதும், அண்டை மாநிலங்களுக்கு வசதியாகி விட்டது. இதனால் மாநில நல்லுறவுகளுக்கு மதிப்பளிக்க மறுத்து, தடுப்பணைகள் - அணைகள் மூலமாக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை மனம் போன போக்கில் தடுத்து வருகின்றன.

ஆகவே இனிமேலும் தூங்கிக் கொண்டிருக்காமல், அதிமுக அரசு உடனடியாக மவுனம் கலைக்க வேண்டும். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். பாலாற்றில் ஆந்திர மாநில அரசு மேற்கொண்டிருக்கும் தடுப்பணைப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள வழக்கில் உச்சநீதிமன்றத்தை உடனடியாக அணுகி தடையுத்தரவைப் பெற வேண்டும் என்றும் அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். 

அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை தடுக்க மேற்கொள்ளும் அநியாயமான நடவடிக்கைகளை  அவ்வப்போது கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்க மூத்த “ஐ.ஏ.எஸ் அதிகாரி” தலைமையில் தமிழக அரசு தனியாக ஒரு “நதி நீர் பாதுகாப்பு” கமிட்டியை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News