தீபாவளி பண்டிகையையொட்டி, பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு துவக்கம்?

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் நாளை முன்பதிவு தொடங்குகிறது.

Last Updated : Aug 26, 2019, 02:48 PM IST
தீபாவளி பண்டிகையையொட்டி, பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு துவக்கம்? title=

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் நாளை முன்பதிவு தொடங்குகிறது.

தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். தீபாவளி பண்டிகையின் போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது.

மேலும் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரெயில்களை இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. எனினும் சிறப்பு ரெயில்களிலும் முன்பதிவு உடனே முடிந்து விடும் என்பதால் பெரும்பாலானோர் தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய முற்படுவர்.

அந்த வகையில் சென்னையில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும், 1200 பேருந்துகளில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். அவற்றில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

அதன்படி அக்டோபர் 25-ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு நாளை ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும். பயண சீட்டுகளை www.tnstc.in மற்றும் 2 தனியார் இணைய தளங்கள் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகையின்போது எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது குறித்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுடன் அடுத்த 2 வாரங்களில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாகவும், அதன் பின்னர் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாட்களில் சென்னை, புறநகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அதனை குறைக்கும் வகையில் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News