'என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்...' அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஜய் - முழு அறிக்கை

Tamilaga Vettri Kazhagam Vijay: தனது அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்தவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 4, 2024, 01:59 PM IST
  • நடிகர் விஜய் கடந்த பிப். 2 அன்று தனது அரசியல் கட்சியை அறிவித்தார்.
  • தமிழக வெற்றி கழகம் என விஜய் தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார்.
  • விஜய் அரசியல் வருகைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
'என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்...' அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஜய் - முழு அறிக்கை title=

Vijay Political Entry: தமிழ்நாடு அரசியல் ஏற்கெனவே மக்களவை தேர்தலை முன்னிட்டு சூடுபறந்துவந்த நிலையில், கடந்த பிப். 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வெளியான அறிக்கை ஒன்று, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பையும் உண்டாக்கியது எனலாம். ஆம், நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகிற்கு பிரகடனப்படுத்தியதன் மூலம் பெரும் கவனத்தை பெற்றார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் 

கடந்த காலங்களில் திரைப்பட பாடல்கள், வசனங்கள், திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள், நலத்திட்ட உதவிகள் என பரந்துபட்ட தளத்தில் தனது அரசியல் கருத்துகளை நடிகர் விஜய் வெளிப்படுத்தி வந்தார். சமீபத்தில் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு நேரில் சென்று, பல மணிநேரங்கள் நின்று அவரின் கையாலேயே நிவாரண பொருள்களை அளித்தது பெரும் கவனத்தை பெற்றிருந்தது. 

அந்த வகையில், அவர் அரசியல் கட்சியை விரைவில் தொடங்குவார் என தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருந்தன. அதனை உறுதிசெய்யும் வகையில், கடந்த பிப். 2ஆம் தேதி அன்று தனது கட்சி குறித்த அறிவிப்பை விஜய் அறிவித்தார். கட்சியின் பெயரை 'தமிழக வெற்றி கழகம்' என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக நடிகர் விஜய் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் இயக்குனர் இவர் தானா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இலக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல்

தொடர்ந்து, ஜன. 24ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அக்கட்சியின் தலைவராக அவரை தேர்வு செய்ததாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது எனவும், யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் அவர் அறிவித்தார். 

குறிப்பாக, 2026ஆம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதே தங்களின் குறிக்கோள் என்றும் விளக்கமாக தெரிவித்திருந்தார். அதுவரை கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தவும், தொண்டர்களை அரசியல்மயப்படுத்தவும் இந்த இடைப்பட்ட காலங்கட்டங்களை பயன்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வாழ்த்து மழையில் விஜய்

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவைான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது அவர் கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார். மேலும், சினிமாவுக்கு விரைவில் முழுக்கு போட்டு, முழு அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். நடிகர் விஜய் தற்போது திரைத்துறையின் உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு அறிவிப்பு ஆச்சரியம் கலந்த விறுவிறுப்பை அளித்திருக்கிறது எனலாம்

நன்றி தெரிவித்த விஜய்

இவரின் அரசியல் வருகையை அடுத்து திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முன்னணி கட்சிக்காரர்கள் முதல், சக திரைச்சினிமா நட்சத்திரங்கள் என பலரும் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் (தற்போது X) தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். தொண்டர்கள், பொதுமக்கள் தரப்பிலும் பலத்த வரவேற்பு காணப்படுகிறது. 

அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில்,"தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், 'என் நெஞ்சில் குடியிருக்கும்  தோழர்கள்' அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்." என குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க | விஜய்யின் அரசியல் நுழைவிற்கு வாழ்த்து சொல்லாத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News