திமுக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி? 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதை

Tamil Nadu Lok Sabha Election Results 2024 Update : லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி சாத்தியமானது எப்படி என்பதை பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 5, 2024, 02:01 PM IST
  • திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி
  • 2019 ஆம் ஆண்டு முதல் தொடரும் கூட்டணி
  • அதிமுக, பாஜக கூட்டணி வியூகமும் காரணம்
திமுக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி? 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதை title=

திமுக தலைமையிலான கூட்டணி நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. 2019 ஆம் ஆண்டு தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் எஞ்சிய தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியிருந்தது. இம்முறை அந்த தொகுதியையும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக வாகை சூடியிருக்கிறது. திமுக கூட்டணியின் இந்த வெற்றி சாத்தியமானதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம், அதிமுகவின் பலவீனம், தமிழ்நாடு பாஜக கூட்டணி, மத்திய அரசின் தமிழநாடு விரோத போக்கு என இந்த பட்டியல் நீள்கிறது.  இதனை புரிந்து கொண்ட திமுக ஒரு இடத்தில் கூட பிசகாமல் சரியான திசையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு லோக்சபா தேர்தலில் தங்களுக்கான வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கிறது. 

2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான விதை 2019 ஆம் ஆண்டே போடப்பட்டது என்றுகூட சொல்லலாம். ஆம், திமுக கூட்டணி 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக அமைந்த அந்த கூட்டணி 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடங்கி, 2024 தேர்தலிலும் தொடர்கிறது. இது திமுக கூட்டணியின் வெற்றிக்கு மிக முக்கியமான அடித்தளம் எனலாம். ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி பிரிந்து சென்றிருந்தால் கூட, அதிமுகவுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும். அந்த தவறை திமுக செய்யவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு சீட் பிரித்து கொடுப்பது முதல் பிரச்சாரம் செய்வது வரை அனைத்து வேலைகளிலும் திமுக முன்னின்று கூட்டணி கட்சிகளை அரவணைத்து சென்றது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக போட்டியிடாத இடங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சுறுசுறுப்பாக வேலை பார்த்து கூட்டணி கட்சியினருக்கும் வெற்றியை தேடி தரவேண்டும் என கட்டளை இட்டார். அந்த கட்டளையை நிறைவேற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். இதனை திமுக மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு, சொந்த கட்சி வேட்பாளர்களுக்கு உழைப்பதுபோல் தங்களின் உழைப்பை செலுத்தினர். அதனுடைய பலன் தான் திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி. மத்தியில் பாஜக வலுவாக இருந்தபோதும், மற்ற எல்லா மாநிலங்களில் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தபோதும் தமிழ்நாட்டில் மட்டும் அந்தளவுக்கான ஆக்ரோஷத்தையும், பிராச்சாரத்தையும் செய்ய முடியாமல் போனதற்கு திமுகவின் வலுவான கூட்டணியே காரணம். இதனை 2026ல் தொடரும்பட்சத்தில் திமுக கூட்டணியின் வெற்றியை தடுப்பது சுலபமாக இருக்காது. 

அதிமுக தன்னுடைய இருப்பை தக்க வைக்க 2021 சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக வேலை செய்தபோதும், 2024 மக்களவை தேர்தலில் அந்த உழைப்பை தொடரவில்லை. இருப்பினும் அக்கட்சி 2026 தேர்தலை மலைபோல் நம்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய இருப்பை தக்க வைக வேண்டும் என்றால் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே களப்பணியை தொடங்கினால் மட்டுமே திமுக கூட்டணிக்கு ஓரளவுக்காவது சவாலை கொடுக்க முடியும். 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News