12 மணிநேர வேலை மசோதா
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 மணிநேர வேலை சட்டமசோதா கொண்டு வரப்பட்டு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு வழங்க விரும்புவதாகவும், இது ஊழியர்கள் விருப்பத்தின்பேரில் மட்டுமே அமல்படுத்தப்படும், அதேநேரத்தில் வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற வேலை நேரத்தில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு
இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து சட்டமசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். மறுபுறம் தொழிற்சங்கள் சட்டமசோதாவை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன. இது தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு வழக்கு: கிளைமேக்ஸ் இன்னும் முடியல.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முதலைமச்சர் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர சட்டமசோதாவை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், "தொழிலாளர்களின் தலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று "2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/20231". தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாகத் தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் இன்று (24-4-2023) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அமைச்சர்கள் விளக்கம்
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)"- என்ற சட்டமுன்வடிவின் முக்கியமான பிரிவுகளில், குறிப்பாகத் தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல் தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும், இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் உள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும், தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர் பெருமக்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.
தொழிற்சங்கத்தினர் கோரிக்கை
மேலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைப் பற்றி முகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு. தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண்டுள்ளது என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் அமைச்சர் பெருமக்கள் எடுத்துக்கூறினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
தொழிலாளர் நலம்பேனும் அரசு
ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தவை. தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும். நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்குத் தொழில் அமைதி மிக அவசியமானது தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறதோ. அப்போதெல்லாம் தொழிலாளர் நலன் பேனும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. தற்போது 'அதே சிந்தனையைத் தாங்கி கருணாநிதி வகுத்துத் தந்த பாதையில், இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதுமே தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக என்றென்றும் விளங்கும் என்பதற்குக் கீழ்க்காணும் திட்டங்களே சான்றாகும். 1969-ல் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். என்பதற்காக, "தொழில், தொழிலாளர் நலம், கூட்டுறவு" என ஒன்றாக இருந்த மூன்று துறைகளிலிருந்து தொழிலாளர் நலனுக்கெனத் தனித்துறையையும், தனி அமைச்சகத்தையும் உருவாக்கியது.
குறைந்தபட்ச ஊதியம் உறுதி
ரத்தம் சிந்திப் போராடி உயிர்த் தியாகம் செய்து, தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமைகள் குறித்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில், 1969 ஆம் ஆண்டில் மே முதல் நாளைச் சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியது; 1969-ல் அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க வகை செய்தது. பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கற் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி, அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது; தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது. போல் "பணிக்கொடை" வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது.
மேலும் படிக்க | கர்நாடக தேர்தல்2023: யுடர்ன் போட்ட எடப்பாடி - அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்
புதிய வேலை வாய்ப்புகள்
தற்போதும், கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான தொழிற்சூழலின் காரணமாகவே, தொடர்ச்சியாக பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் செய்து அதன்மூலம் நமது இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றன. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி வழியில் செயல்படும் இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகின்றதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால், அவற்றைச் சிர்தூக்கி ஆராய்ந்து, அவர்களின் கருத்துக்களுக்கிணங்க அவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும்.
சட்டமசோதா நிறுத்தி வைப்பு
அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், "2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)" என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ