கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் ஒருபகுதியாக தமிழகம் முழுதும் 15,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவை முதல்வர் பழனிசாமி இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து கொரோனா சிறப்பு வார்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., தமிழகம் முழுதும் 15,000 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் #COVID19 மருத்துவமனையாக 500 படுக்கை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வார்டுகளை பார்வையிட்டார். #Corona #TNGovt #TamilNadu pic.twitter.com/yuyYBUSAPt
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 27, 2020
'கொரோனா அச்சம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கூட்டமாக கூடக்கூடாது. வெளியூர் செல்லக்கூடாது, முதியவர்கள் பாதுகாக்கப்படவேண்டும். மீறினால் அவர்கள் மீது 144 தடை உத்தரவு பாயும்.
அரசின் அனைத்துத் துறைகளும் இன்றைக்கு விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளன. அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தனிமைப்படுத்துதல் ஒன்றுதான் மக்கள் அரசுக்கு தரும் ஒத்துழைப்பு. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளைப் பாதுகாக்க வீட்டில் இருக்க வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் #Coronavirus தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையால் அமைக்கப்பட்டுள்ள 24மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை பார்வையிட்டார். pic.twitter.com/rCHPrr56h0
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 27, 2020
மக்களுக்கு வேண்டிய மளிகைப் பொருட்கள், காய்கறி, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் தடையின்றி கிடைக்க அரசு வழிவகை செய்யும். மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை மற்றும் கோவையில் 500 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டுகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் 10 சோதனைக்கூடங்களும், தனியார் சார்பில் 4 சோதனைக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை 1143 பேர் சோதனையிடப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 41 சோதனை மாதிரிகள் காத்திருப்பில் உள்ளன. 35 பேருக்கு சோதனை வாயிலாக நோயின் அறிகுறி தெரிந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 277 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து சுமார் 15000 பேர் வந்துள்ளனர். அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமையில் இருப்பதைக் கண்காணிக்க காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த 24 மணிநேரக் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொற்று நோய் தடுப்பு, மீடியா உள்ளிட்ட ஏழு பிரிவுகளை, துறைகளை இணைத்துச் செயல்படும். 520 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,500 லேப் டெக்னீஷியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 200 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன." என தெரிவித்துள்ளார்.