அண்ணாமலை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்!

சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து அண்ணாமலை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 15, 2023, 10:01 PM IST
  • ரஃபேல் வாட்ச், நண்பர்கள் மூலம் லட்சக்கணக்கில் ஆதாயம்.
  • ஆருத்ரா கோல்ட் நிதி மோசடி தொடர்பு.
  • அண்ணாமலை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்.
அண்ணாமலை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்! title=

ரஃபேல் வாட்ச், நண்பர்கள் மூலம் லட்சக்கணக்கில் ஆதாயம், ஆருத்ரா கோல்ட் நிதி மோசடி தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று செய்தியார்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அப்போது அவர் தனது கையில் கட்டியிருக்கும், அவரது தேசப்பற்றை நிரூபிக்கும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அரிய ரஃபேல் வாட்சை, கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறி ஒரு ரசீது பேப்பர் ஒன்றை காட்டினார். சேரலாதன் ராமகிருஷ்ணன் அளித்ததாக அவர் காண்பித்த அந்த ரசீது பேப்பரில், அண்ணாமலை குப்புசாமிக்கு பெல்&ராஸ் வாட்சை ரூ.3 லட்சம் ரொக்கமாக பெற்றுக்கொண்டு அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் வருமான வரித்துறை சட்டமானது எந்த ஒரு பொருளையும் வாங்கும் போது, அந்த பொருளின் விலையானது ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், அந்த தொகையை வங்கி காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வங்கி பணப்பறிமாற்றம் மூலம் வழங்க வேண்டும் என கூறுகிறது. வருமான வரி சட்டம் இவ்வாறு இருக்கும் போது, ரூ.3 லட்சத்தை ரொக்கமாக அளித்து ரஃபேல் வாட்சை வாங்கியது என்பது வருமானவரி சட்டப்படி குற்றமாகும். மேலும், இது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Money laundering) கீழான விசாரணைக்கு உகந்த குற்றமாகும். ஆகவே, ஆளும் கட்சியின் ஏவலாக எதிர்கட்சிகளை விரட்டிப் பிடிக்கும் நடவடிக்கையில் பிஸியாக இருக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள், மிக வெளிப்படையாக குற்றத்தில் ஈடுபட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்க செந்தில் பாலாஜியின் அடுத்த திட்டம்

அதேபோல், தனது ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விவசாயம் செய்து 4 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தியதாக கூறிய அண்ணாமலை, தான் அரசியலுக்கு வந்த பின்னர் மாதம் 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும்,  தனக்கு சில நண்பர்களே மாத வீட்டு வாடகை ரூ 3.75 லட்சம் உள்பட தனது உதவியாளர்கள், டிரைவர்களுக்கு சம்பளம், கார் செலவு அனைத்திற்கும் உதவி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.  அண்ணாமலை கூறுவது போல இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்யும் நண்பர்கள் அண்ணாமலை ஐ.பி.எஸ். பதவியில் இருந்த போது அவர் மூலமாக ஆதாயம் அடைந்தவர்களாகவோ அல்லது மத்தியில் ஆளும் தனது கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி ஆதாயம் அடைந்தவர்களாகவோ இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. 

ஆகவே, அண்ணாமலையின் இந்த ஓப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசு சிறப்பு புலனாய்வு விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், சமீபத்தில் பொது மக்களிடம் பல ஆயிரம் கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்ட் நிதி மோசடி விவகாரத்தில் அண்ணாமலையின் தொடர்பும் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுபோன்ற மோசடி நண்பர்கள், ஆதாயம் அடைந்த நண்பர்கள் மூலம் அண்ணாமலை ஆதாயம் அடைந்தாரா? என்பதை தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்திட வேண்டும்.

மேலும் படிக்க | அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலுக்கு கனிமொழியின் காட்டமான ரியாக்ஷன்

அதேபோல், அண்ணாமலை பாஜக மாநில தலைவராக ஆவதற்கு முன்னர், அவர் ஏழையாக ஆடு மேய்த்து கொண்டிருந்த காலத்தில், சென்னையை சேர்ந்த ஜி.எஸ்.வி. நிறுவனம் அண்ணாமலையின் எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளதாகவும், மாதம் மாதம் ரு.1.66 லட்சம் அனுப்பியதாகவும் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நண்பர்கள் தயவில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் வாழ்க்கையை நடத்தும் ஏழையான அண்ணாமலைக்கு, எதற்காக அந்த நிறுவனம் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும். அவர்களுக்குள்ளான தொடர்பு என்ன என்பதும் குறித்தும் தமிழக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தான் வகித்த பதவி, வகிக்கும் பதவி மூலம் லட்சக்கணக்கில் ஆதாயம் அடைந்துள்ள, பணமோசடி (Money laundering) குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ள அண்ணாமலை, சட்டத்திற்கு புறம்பான தனது செயலை மறைக்க பிறர் மீது குற்றம் சுமத்தி தனது குற்றச்செயல்களை மடைமாற்றும் யுக்தியை கையாண்டு வருகின்றார். நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் அண்ணாமலையின் யோக்கியன் வேசம் வெளிப்பட்டுள்ளது. எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடாத, அரசுப் பணியை துறந்த, பொதுவாழ்க்கையில் ஈடுபடும் அண்ணாமலை, தனக்கு பல்வேறு வழிகளில் வரும் நிதியை மறைக்க, நண்பர்கள் உதவி, 4 ஆடு மட்டுமே உள்ள சாமானியன் என மக்களை ஏமாற்றி வருகின்றார். அண்ணாமலையின் இந்த புரூடாக்களை நம்பி ஏமாறுபவர்கள் அல்ல தமிழக மக்கள். 

தன்னை யோக்கியவானாக காட்டிக்கொள்ள பிற அரசியல் கட்சியினர் மீது குற்றச்சாட்டுகளை, அவதூறுகளை அள்ளி வீசக்கூடிய அண்ணாமலை, தானாகவே பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தனக்கு நண்பர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் அன்பளிப்பாக வருகின்றது என ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதனை அவரின் ஒப்புதல் வாக்குமூலமாகவே எடுத்துக்கொள்ளலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசு சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து,  ஆருத்ரா கோல்ட் நிதி மோசடி தொடர்பு, லட்சக்கணக்கில் நண்பர்களிடமிருந்து அண்ணாமலை பெரும் ஆதாயம், ரஃபேல் வாட்ச் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அண்ணாமலைக்கு லட்சக்கணக்கில் அன்பளிப்பு அளிக்கும் அந்த நண்பர்கள் யார்? அவர்களுக்கு எந்த வகையில் வருமானம் வருகின்றது? அவர்கள் முறையான வழியில் வருமானம் ஈட்டுகின்றார்களா? என்பன போன்றவை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளும் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அண்ணாமலை ரஃபேல் வாட்ச் வாங்கவில்லை... பிரியாணிதான் வாங்கினார் - வெளியான புதிய ஆதாரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News