Tamilnadu Cabinet Reshuffle: தமிழ்நாடு அமைச்சரவையில், பல அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
புதிதாக பதவியேற்ற டிஆர்பி ராஜா தொழில்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் தற்போது பால்வளத்துறை அமைச்சராக மாற்றி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த டிசம்பருக்கு பின்..
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்து இரண்டாம் ஆண்டு கடந்த மே 7ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டது. திமுக ஆட்சியை பிடித்த பின் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், எஸ்எஸ் சிவசங்கர், மதிவேந்தன், மெய்யநாதன், பெரியகருப்பன், ஐ. பெரியசாமி ஆகியோருக்கு இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டன.
சேகர்பாபு, ராமசந்திரன், காந்தி உள்ளிட்டோருக்கு கூடுதல் இலாக்காக்களும் வழங்கப்பட்டன. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர், இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.
ஏன் பிடிஆர் மாற்றம்?
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆரம்பம் முதல் நிதியமைச்சராக தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அவரின் இலாக்கா மாற்றம் என்பது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சமீப காலமாக, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் பேசிய ஆடியோ பதிவுகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார். அந்த சர்ச்சையின் அடிப்படையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா - டிஆர்பி ராஜா விவாதம்
மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அவருக்கு தொழில்துறையில் அனுபவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உதாரணமாக, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் - டிஆர்பி ராஜாவுக்கும் இடையே ஆங்கிலத்தில் நடந்த காரசார விவாதம் என்பது அன்றைய காலகட்டத்தில் பெரும் கவனத்தை பெற்றது. அந்த விவாதத்தின்போது, டிஆர்பி ராஜாவை ஜெயலலிதா 'மை டியர் யங் மேன்' என அழைத்து அவரின் கேள்விகளுக்கு பதிலளித்திருப்பார். மேலும், அதில் சில விவாதங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ