போராட்டம் நடத்திய மாணவர்களின் கோரிக்கை ஏற்று அண்ணா பல்கலைக்கழகம் புதிய விதிகள் வெளியீடு...
5-வது பருவத்தில் நுழையும் மாணவர்கள் முதல் பருவத்தேர்வில் எந்த அரியரும் வைத்திருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய தேர்வு நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஒற்றை இலக்கப் பருவத்தேர்விலும், இரட்டை இலக்கப் பருவத் தேர்விலும் தோல்வியுற்ற பாடங்களை அந்த வகையான பருவத் தேர்வில் மட்டுமே எழுத முடியும் என்ற விதியை எதிர்த்து, கடந்த ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், ஒரு பருவத் தேர்வில் அதிகபட்சம் 3 அரியர்களை மட்டுமே எழுத முடியும் என்ற விதிகளுக்கும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும், அரியர் வைத்தவர்கள் பட்டப் படிப்பை முடிக்க மேலும் ஓராண்டு முதல் காத்திருக்க நேரிடும் என தெரிவித்திருந்தனர். மாணவர்களின் போராட்டத்தை அடுத்து அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலக்கூடிய மாணவர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட புதிய தேர்வு விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பருவத்தேர்வில் அதிகபட்சம் 3 அரியர் மட்டுமே எழுத முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, நடப்பு மற்றும் அதனை தொடர்ந்து வரும் 3 பருவத் தேர்வுகளில் தோல்வியுற்ற பாடத்தை மீண்டும் எழுதி தேர்வாக வாய்ப்பு வழங்கப்படுகிறது.
முதல் இரண்டு ஆண்டுகளைத் தொடர்ந்து மூன்றாமாண்டில் அதாவது 5-வது பருவத்தேர்வில் நுழையக் கூடிய மாணவர்கள் முதலாவது ஆண்டின் முதல் பருவத் தேர்வில் எந்த அரியரும் வைத்திருக்கக்கூடாது. அப்படி இருந்தால் முதலாமாண்டு பயிலும் மாணவர்களின் வகுப்புக்குச் சென்று அந்த பாடத்தைப் படித்து தேர்ச்சி பெற்ற பின்பே, 5-வது பருவத் தேர்வில் அந்த மாணவர் நுழைய முடியும். அதேபோல் 6-வது பருவத்தேர்வில் நுழைவதற்கு மாணவர் தமது இரண்டாவது பருவத் தேர்வில் அரியர் வைத்திருக்கக் கூடாது என்று புதிய விதிகளில் வகுக்கப்பட்டுள்ளது.
இதே நடைமுறையின் படியே, 7 மற்றும் 8 என அடுத்தடுத்த பருவத் தேர்வுகளுக்கும் இதே விதிமுறையை வகுத்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், தோல்வியுறும் மாணவர்கள் மீண்டும் அந்த வகுப்புக்குச் சென்று பயின்று தேர்ச்சி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.