சென்னை: தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதைப்பயன்படுத்தி பல தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பஸ்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு வருடமும் அதிக கட்டணம் வசூல் சம்பந்தமாக பல புகார்கள் பொது மக்கள் தெரிவித்து தான் வருகிறார்கள். அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொண்ட பிறகும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு மெத்தனம் காட்டுகிறதா? என்ற கேள்வியும் பலர் எழுப்பி வருகின்றனர்.
ஒவ்வொரு வருடம் போலவே, இந்த வருடமும் சொந்த ஊருக்கு பயணிக்கும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். மேலும் பேசிய அவர், தீபாவளி பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அரசு செய்துள்ளது எனவும் கூறினார்.
தீபாவளி பண்டிகையின் போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. மேலும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதுமட்டுமில்லாமல் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 24 மணி நேரமும் சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரெயில்களை இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. எனினும் சிறப்பு ரெயில்களிலும் முன்பதிவு உடனே முடிந்து விடுவதால், பெரும்பாலானோர் அரசு விரைவு பேருந்து, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வார்கள். அத்தகைய சூழ்நிலையில், தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பஸ்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிகின்றனர்.