புயல் எச்சரிக்கை; 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

ஃபோனி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது!

Last Updated : Apr 27, 2019, 06:20 PM IST
புயல் எச்சரிக்கை; 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... title=

ஃபோனி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது!

நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களிலும் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு, வங்கதேசம் தேர்வு செய்துள்ள ஃபோனி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்க கடலில், வியாழக்கிழமையன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, வெள்ளிக்கிழமை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சனிக்கிழமை, அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்த நிலையில், புயலாக மாறியிருக்கிறது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் "இந்த புதிய புயல் சின்னத்திற்கு, வங்கதேசம் தேர்வு செய்துள்ள ஃபோனி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புயல், சென்னையிலிருந்து, தென்கிழக்கே, ஆயிரத்து 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

இந்த புதிய புயல் சின்னம், அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது, ஞாயிற்றுக்கிழமையன்று, தீவிரமான புயலாக மாறும். இந்த ஃபோனி புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாட்டின் வடக்கு கடலோர பகுதிகள், ஆந்திர மாநிலத்தின் தெற்கு பகுதிகளை நோக்கி, செவ்வாய்க்கிழமை மாலை வாக்கில் நெருங்கி வரக்கூடும்" என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் புயல் கரையை கடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னைக்கு அருகே, 200 அல்லது 300 கிலோ மீட்டர் தொலைவில் நெருங்கி வரக்கூடும் எனவும் தெரிவித்தார். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending News