புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அணை கட்டும் கர்நாடக அரசு, அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்றத்திலும் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி சிறப்பு கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் 5-ஆம் நாள் புதுவை சட்டமன்ற சபாயாகர் அறையில் திமுக MLA சிவா சட்டமன்ற சிறப்பு கூட்டம் வேண்டி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.