தேனி அருகே பிரியாணியில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பம் அருகே வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சக்தி நாகராஜ் பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றச்செயலில் ஈடுப்பட்ட ஓட்டுநர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓட்டுநர் சக்திநாகராஜ் என்பவர் தன்னை காதலிக்குமாறு பாதிக்கப்பட்ட இளம்பெண்னை வற்புறுத்தியுள்ளார். மேலும் சக்திநாகராஜின் பெற்றோர் குமார் மற்றும் செல்வி ஆகியோரும் தனது மகனைக் காதலிக்குமாறு மாணவியை மிரட்டியுள்ளனர்.
இதற்கிடையே மாணவியை மிரட்டி தனது வீட்டிற்கு அழைத்து சென்ற சக்திநாகராஜ் பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வற்புறுத்தி சாப்பிட வைத்துள்ளார்.
ஒருகட்டத்தில் மாணவி மயங்கி விழுந்ததும் அவரை ஓட்டுநர் சக்திநாகராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனை தனது செல்போனிலும் படம் பிடித்த சக்திநாகராஜ் நடந்ததை வெளியில் கூறினால் அந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஓட்டுநர் சக்திநாகராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குமார், செல்வி ஆகிய மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.