சென்னை: முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா வரும் 7 ஆம் தேதி சென்னை திரும்புவார் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். இன்று மதுரையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் இந்த தகவலை வெளியிட்டார். மேலும் உண்மையின் பக்கம் இருப்பபர்களும் விஸ்வாஸத்தின் பக்கம் இருப்பவர்களும் சசிகலாவை ஆதரிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா விடுதலை பெற்று பெங்களூரு அருகேயுள்ள ஹெப்பல் நகரில் தங்கியிருக்கிறார். கொரோனா தொற்று இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சசிகலா, விரைவில் தமிழகம் வருவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிறை தண்டனை அனுபவித்து தமிழகம் திரும்பவுள்ள சசிகலாவின் (Sasikala) விடுதலை பல விடுகதைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஜெயலலிதாவின் மிக நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அவர் முதல்வராய் இருந்த நேரத்திலேயே கட்சியில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார். பல ஆட்சி மற்றும் கட்சி தொடர்பான முடிவுகளை ஜெயலலிதாவுடன் சேர்ந்து அவரும் எடுத்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக தொண்டர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் சசிகலா கட்சியை கட்டிக்காக்கும் பொறுப்பை ஏற்றார். ஆனால், அதன் பின் அனைத்தும் அவருக்கு எதிராக மாறின. கட்சியில் அவருக்கு எதிராக குரல்கள் எழும்பின. அதே வேளையில், சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்தது.
சிறை சென்ற சசிகலா, தமிழக அரசியல் களத்திலிருந்து ஒதுங்கிப்போனார். அவர் சிறையில் இருந்தாலும், அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் இணைந்து உருவாக்கிய அமமுக கட்சி, அவ்வப்போது தமிழக அரசியலில் தங்களது இருப்பைக் காட்டிக்கொண்டுதான் இருந்தது.
சசிகலாவின் விடுதலைக்கான காலம் நெருங்கவே தமிழக அரசியலிலும், பல கட்சிகளிலும் குழப்பங்களும், சந்தேகங்களும், கருத்து வேறுபாடுகளும் உருவாகத் தொடங்கின. ஒருவரது விடுதலை இத்தனை விடுகதைகளை போடுகிறதென்றால், அவரது ஆளுமையின் தாக்கம் பெரிதாகவே உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ALSO READ: தமிழை சுவாசித்தவர் தமிழர்களை நேசித்தவர் அறிஞர் அண்ணா- ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா சிறையில் இருந்த காலத்தில், அதிமுக (AIADMK) தனக்கென ஒரு தனி அடையாளத்தையும் தனித்துவமான நற்பெயரையும் சம்பாதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வது குறித்து கட்சியில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதை கண்கூடாகக் காண முடிகிறது.
இதற்கிடையில் சசிகலா வை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டுவது, கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
சசிகலாவை பாராட்டிய சுவரொட்டிகளை வைத்ததற்காக மேலும் மூன்று அதிமுக கட்சி நிர்வாகிகளை கட்சி செவ்வாய்க்கிழமை வெளியேற்றியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில், "கட்சி விரோத நடவடிக்கைகளில்" ஈடுபட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்தனர்.
எம்.சின்னராஜா, ஆண்டிபட்டி (மேற்கு) பஞ்சாயத்து தொழிற்சங்கம் தேனி மாவட்டத்தின் எம்.ஜி.ஆர் மன்ற தலைவர், திருச்சியின் (புறநகர் – தெற்கு) திருவரம்பூர் (கிழக்கு) ஒன்றியத்தின் ஏ.என். சாமிநாதன் மற்றும் மயிலாடுதுரை மாவட்டத்தில் செம்பானர்கோயில் (வடக்கு) ஒன்றியத்தின் சிறுபான்மையினர் பிரிவின் செயலாளர் குத்புதீன் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுள்ளனர்.
முன்னதாக, சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டியை வைத்ததற்காக திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு செயல்பாட்டாளரை அதிமுக, கட்சியை விட்டு வெளியேற்றியது.
"அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச் செயலாளர் அவர்களே” என்று சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் சசிகலாவின் பெரிய படம் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. எம்.ஜி.ஆர் மன்றத்தின் இணை செயலாளராக பணியாற்றிய சுப்பிரமணிய ராஜாவின் பெயர் மற்றும் படம் இந்த சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தது.
சசிகலா பிப்ரவரி 7 ஆம் தெதி தமிழகம் திரும்புகிறார். ஜெயலலிதாவின் அதிமுக-வை மீட்டெடுப்பதற்காகவே அமமுக (AMMK) உருவாக்கப்பட்டது என தினகரன் ஏற்கனவே கூறியுள்ள நிலையில், சசிகலா தமிழகம் திரும்பியவுடன் அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.
ALSO READ: தமிழக அரசு உலக சாதனை- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR