சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரிய ஆசிரியை கள் கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் சௌடேஸ்வரி கலைக் கல்லூரி
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சௌடேஸ்வரி கலைக் கல்லூரியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியின் முதல்வர் பாலாஜி கடந்த சில மாதங்களாக மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்
இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளதாகவும் தெரிய வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட பாலியல் தொல்லை கொடுக்கும் கல்லூரி முதல்வர் பாலாஜியை கைது செய்யக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கல்லூரியின் நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
முதல்வரை கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் இந்த புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் பாலாஜியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இது குறித்து ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கூறும் போது, ஆசிரியைகள் மற்றும் மாணவிகளை தனியாக அழைத்து அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களை வேறு மாதிரியாக தொல்லை கொடுத்து மன உளைச்சல் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை
இதனிடையே கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகளை மறைக்கவே தன் மீது பொய்யான குற்றம் சாட்டப்படுவதாகவும், இது தொடர்பாக அனைத்து விசாரணைக்கும் தயாராக உள்ளதாகவும் புகாருக்குள்ளான முதல்வர் பாலாஜி தெரிவித்துள்ளார். கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பாக கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ