தமிழ்நாட்டிலுள்ள மாநில பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசால் எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படாத நிலையில், ஆசிரியர்கள் நியமனத்திற்கான இட ஒதுக்கீட்டு முறை, அதிகாரிகள் கூட்டணியால், பாரதிதாசன் பல்கலை.யில் தலைகீழாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 28 துறைகளில் காலியாக உள்ள 14 பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 26 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை 2019 ஜூலை 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழக அரசு பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதப்பட்டு, அதற்குள் 69% இடஒதுக்கீடு 200 புள்ளி ரோஸ்டர் முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆள் தேர்வு அறிவிக்கையில் ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஓர் அலகாக கருதப்பட்டு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிகளுக்கான நேர்காணல் கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இந்த செயல் சமூகநீதியை சீரழிக்கும் செயல் என்று கடந்த ஜனவரி 9&ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.
அதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட தமிழக அரசு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த ஆசிரியர் பணிகளுக்கான நேர்காணலை நிறுத்தி வைத்தது. அதன்பின் எந்த கொள்கை மாற்ற முடிவும் அரசால் அறிவிக்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாக கருதி 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம்; ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி முதல்நிலை தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டவர்களைக் கொண்டு நேர்காணல் நடத்தி, பேராசிரியர்களை நியமிக்கலாம் என பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தருக்கு மாநில உயர்கல்வித்துறை செயலாளர் மே 28-ஆம் தேதி கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
69% இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் விஷயத்தில் தமிழகப் பல்கலைக்கழகங்களை ஒரே அலகாக கருத வேண்டிய தேவையே இல்லை. மத்திய பல்கலைக்கழகங்களில் தான் 27% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ‘பல்கலைக்கழக அலகு’ கடைபிடிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ‘துறை அலகு’ தான் சிறந்தது என 2017&ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால், மத்திய அரசோ, அந்த தீர்ப்புகளை செல்லாததாக்கும் வகையில் பல்கலைக்கழக அலகு முறைக்கு ஆதரவாக சட்டம் நிறைவேற்றியது. அந்த சட்டம் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தமிழக பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை ‘துறை அலகு’ முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்; இந்த ஆணை 2018 செப்டம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய உயர்கல்வித்துறை செயலர் 13 பல்கலைக்கழகங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக அலகு முறையில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தடை விதித்து கடந்த ஜனவரி மாதத்தில் அப்போதைய உயர்கல்வித்துறை செயலர் ஆணையிட்டிருந்தார்.
பொதுவாக பல்கலைக்கழகங்களின் இடஒதுக்கீட்டு முறையில் ஏதேனும் மாற்றங்கள் செய்வதாக இருந்தால், அது குறித்து முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி தான் முடிவெடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் குறைந்தபட்சம் உயர்கல்வி அமைச்சர் தலைமையில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும். ஆனால், அந்த இரு நிலைகளிலும் அத்தகையதொரு முடிவு அறிவிக்கப்படாத நிலையில், பல்கலைக்கழக அலகு முறையில் 69% இட ஒதுக்கீட்டை செயல்படுத்தலாம் என்ற கொள்கை முடிவை தன்னிச்சையாக எடுக்க உயர்கல்வித்துறை செயலருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அமைச்சரவைக்கு உரிய அதிகாரத்தை உயர்கல்வி செயலர் தன்னிச்சையாக பறித்துக் கொள்வதை அனுமதிக்கக்கூடாது.
ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாக கருதி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதி இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் போது, ஒவ்வொரு துறையிலும் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பணி நியமன வாய்ப்பு கிடைக்கும். இது தான் சமூகநீதியை தழைக்கச் செய்யும். மாறாக, ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஓர் அலகாக கருதி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு துறையில் முழுக்க முழுக்க ஒரே இடஒதுக்கீட்டுப் பிரிவினரும், இன்னொரு துறையில் முழுக்க முழுக்க உயர்வகுப்பினரும் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது பல்வேறு பாகுபாடுகளுக்கு வழிவகுத்து விடும். இந்த அநீதி தடுக்கப்படாவிட்டால், மற்ற பல்கலைக்கழகங்களும் அதையே கடைபிடிக்கத் தொடங்கிவிடும். அது சமூகநீதியை சிதைத்து விடும். இதை அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கான ஆசிரியர்கள் நியமனத்தில் மேலும் பல குளறுபடிகள் உள்ளன. 1990&ஆம் ஆண்டு முதல் அனைத்து பணியிடங்களும் இட ஒதுக்கீட்டின்படி முழுமையாக நிரப்பப்பட்டு வரும் நிலையில், 15 பணியிடங்கள் கைம்பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதும், விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, அனுபவம், சாதனைகள் ஆகிய அனைத்தும் முதல்நிலைத் தகுதி பட்டியல் தயாரிப்புக்கு மட்டுமே எடுத்து கொள்ளப்படும்; நேர்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்பதும் முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, ‘துறை அலகு’ இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் புதிய நியமன அறிவிக்கையை வெளியிடும்படி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளருக்கு ஆணையிட வேண்டும். பல்கலை.களில் சமூக நீதியை உறுதி செய்ய எத்தகைய போராட்டத்தை நடத்தவும் பா.ம.க. தயங்காது என்றார்.