முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் நளினியும் ஒருவராவார். நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பலர் கோரி வருவது அனைவரும் அறிந்த விஷயமாகும்.
இந்நிலையில், நளினி (Nalini) சிறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. எமக்குக் கிடைத்த தகவல்களின் படி, நளினிக்கும் சிறையில் உள்ள சில கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சில மன வேறுபாடுகள் சண்டையாக மாறியுள்ளது. இந்த சண்டை காரணமாக நளினி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனமுடைந்த நளினி, தன்னிடம் இருந்த ஒரு துணியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
சரியான சமயத்தில் இது ஒரு காவலரால் பார்க்கப்பட்டு, தற்கொலை முயற்சி முறியடிக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: சாத்தான்குளம் கொலை வழக்கு: மேலும் 3 போலீஸ்காரர்களை காவலில் எடுத்த சிபிஐ
முன்னதாக, நளினி தன்னை வேலூர் பெண்கள் தனிச்சிறையிலிருந்து புழல் சிறைக்கு (Puzhal Jail) மாற்றக் கோரி பலமுறை சிறை நிர்வாகிகளிடமும் நிர்வாகத்திடமும் கோரியுள்ளார். ஆனால் நிர்வாகம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனாலும் நளினி மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியும் இதை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது நளினி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளது இந்த விவகாரத்தை பெரிதாக்கியுள்ளது. நளினிக்கு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பாதுகாப்பு இல்லை என்ற நளினி மற்றும் அவரது வழக்கறிஞர்களின் கூற்று உண்மையாகியுள்ளது என்று பலர் கருதுகிறார்கள்.