Rajini as a Politician: அரசியல்வாதியாக தேர்தல் களத்தில் நுழையும் சூப்பர் ஸ்டார்

‘எல்லாவற்றையும் மாற்றுவோம்’ மற்றும் ‘இப்போது இல்லாவிட்டால் ஒருபோதும் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குகளுடன் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் செய்தியை ரஜினி ட்வீட் செய்திருந்தார். ரஜினியின் அறிவிப்பும், அதன் பின்னணியும் என்ன?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 3, 2020, 05:12 PM IST
  • பாஜகவின் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி
  • நதி நீர் இணைப்பில் ஆர்வம் காட்டியவர் ரஜினிகாந்த்
  • சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததற்கு ஆதரவு அளித்தார் ரஜினி
Rajini as a Politician: அரசியல்வாதியாக தேர்தல் களத்தில் நுழையும் சூப்பர் ஸ்டார் title=

புதுடெல்லி: ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

‘எல்லாவற்றையும் மாற்றுவோம்’ மற்றும் ‘இப்போது இல்லாவிட்டால் ஒருபோதும் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்த செய்தியை ரஜினி ட்வீட் செய்திருந்தார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களில் மக்களின் முழு ஆதரவோடு நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று ரஜினி தெரிவித்துள்ளார். 

இனி தமிழக அரசியல் களம் சூடுபிடித்துவிடும். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ரஜினியின் அரசியல் வருகை பலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும்.

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், அவ்வப்போது அறிக்கைகளை மட்டுமே அறிவித்துக் கொண்டிருப்பார் என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், நவம்பர் 30 திங்கட்கிழமையன்று, தனது ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார். அன்றும் அரசியல் பிரவேச அறிவிப்பு ஏதேனும் வரலாம் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணம் குறித்த முடிவை விரைவில் வெளியிடுவேன் என்று கூறினார்.

எது எப்படியிருந்தாலும், இனி அறிக்கைப் போர்களும், அறிவிப்புகளும், ஊகங்களும் வதந்திகளும் என அரசியல் களம் சூடுபிடிக்கவிருப்பதற்கு கட்டியம் கூறுவதாக ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு வந்துள்ளது.

அதிலும், ‘மாநில முதல்வராக இருக்க விரும்பவில்லை, புதிய தலைவர்களை உருவாக்க விரும்புகிறேன்’ என்று இதற்கு முன்னதாக ரஜினி (Rajini)கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, அவர் அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கை உலா வந்தது. அது ரஜினியுடையது என்றும் வதந்திகள் கூற, அதை ரஜினி நிராகரித்தார்.

ஆனால், தனது உடல்நலம் தொடர்பான அறிக்கையின் சில உள்ளடக்கங்கள் உண்மை என்றும் அவர் தனது ஒருங்கிணைந்த ரசிகர் மன்றத்தின் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பதாகவும் அந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த். 

Also Read | ரஜினிகாந்த் உடன் பாஜக இணையுமா? AIADMK-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. கோவிட் நோய்க்கு தடுப்பூசி (vaccine) இல்லாத காரணத்தாலும், ரஜினி தீவிர அரசியலில் இறங்குவது குறித்து ரஜினியின் மருத்துவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்கள் மட்டுமே இருப்பதால் அவர் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.  இந்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சென்னையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தபோது, அது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. 

ஆனால், ஏமாற்றம் அளிக்கும் விதமாக, ‘அரசியலை சுத்தம் செய்வதற்கான’ தனது பார்வையை மட்டுமே அப்போது ரஜினி காந்த் கோடிட்டுக் காட்டினார். “நான் ஒருபோதும் தமிழக முதல்வராக வருவதையோ அல்லது சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஒரு புதிய அலை, புதிய சக்தி மற்றும் புதிய ரத்தம் சட்டசபையில் அதிகாரத்தில் அமரவேண்டும் என விரும்புகிறேன், ரஜினி இதற்கு ஒரு பாலமாக மட்டுமே இருப்பார்” என்றும் தெளிவாகக் கூறினார் ரஜினிகாந்த்.

Also Read | Big Announcement Rajinikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி

“நான் மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன். 15-20 சதவீத வாக்குகளைப் பெற நான் இங்கு வரவில்லை, இது எனக்கு ஒரே வாய்ப்பு. எனக்கு 71 வயதாகிறது, 2026 இல் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும்போது எனக்கு வயது 76 ஆகிவிடும். மாற்றம் தேவை என்பதே என்னுடைய விருப்பம் என்ற செய்தி அதிகமான மக்களை அடைய வேண்டும். அது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன், நான் அரசியலுக்கு வருவேன்” என்று மார்ச் மாதம் ரஜினி காந்த் தெரிவித்தார்.

ரஜினி காந்த் முறையாக அரசியலில் நுழையாமல், ரஜினி தனது அரசியல் சார்பை காட்டும் அறிக்கைகளையும், கருத்துக்களை அடிக்கடி தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.1995 ஆம் ஆண்டில், ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக (AIADMK) அரசாங்கத்திற்கு எதிராக ரஜினிகாந்த் பேசியிருந்தார். ரஜினியின் இந்த எதிர்ப்பால், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவு-க்கு (DMK) ஆதரவாக மக்கள் வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது.

Also Read | Rajini in Politics: என் உயிரே போனாலும் மக்களின் நலனே முக்கியம்  

இதேபோல், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சமயத்தில், நரேந்திர மோடி-அமித் ஷா தலைமையிலான பாஜகவின் (Modi-Shah-led BJP) ஆட்சியின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு ஆதரவான அறிக்கைகளை ரஜினி வெளியிட்டார் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில், ரஜினி, மோடி அரசின் பண விலக்க நடவடிக்கை, நதி நீர் இணைப்பு (river-interlinking project), சி.ஏ.ஏ / என்.ஆர்.சி (CAA/NRC) சட்டப்பிரிவு 370-ஐ (Article 370) ரத்து செய்தல் போன்றவற்றுக்கு ஆதரவாக பேசியிருந்தார். மோடி-ஷா ஜோடியை, மகாபாரதத்தைச் சேர்ந்த அர்ஜுனன்-கிருஷ்ணர் என்றும் பாராட்டி பேசியிருந்தார் ரஜினி. அத்துடன், "அவர்களில் கிருஷ்ணா யார், அர்ஜுனா யார் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும், மக்களுக்கு தெரியாது" என்று ரஜினி கூறியிருந்தார், அதற்கு பாஜக தலைவர் அமித் ஷா 2019இல் புன்னைகையை பதிலாய் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினி தனது பாஜகவின் நிர்வாகியாக இருந்த அர்ஜுன மூர்த்தியை, தனது தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிமுகப்படுத்தியதும் பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  அர்ஜுன மூர்த்தி பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பதவி வகித்தவர். வேல்யாத்திரையில் கலந்துகொண்டு கைதானவர் என்பது கூடுதல் தகவல்.  

இறுதியாக, அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அறிவிப்பு தற்போது பல்வேறு கோணங்களில் அலசி ஆராயப்படுகிறது.

Also Read | அரசியல் களத்தில் #ரஜினி... 234 இடங்களில் போட்டியிட உள்ளதாக தகவல்!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News