கோயம்பேடு பேருந்துநிலையத்தில் சிறப்புகணினி முன்பதிவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்....
தீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். பொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்றும் கூறுவார். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஆண்டு தோறும் பொங்கல் திருநாளுக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 24,708 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. சென்னை கோயம்பேட்டில் உள்ள சிறப்பு முன்பதிவு மையத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவிற்காக கோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு மையமும் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்கள் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.