வாடிய மக்கள் இனி வாழ்க்கையில் முன்னேறட்டும்: மருத்துவர் இராமதாசு

தமிழகத்தில் வன்னியர்களுக்கு  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை , அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட  26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 27, 2021, 03:22 PM IST
வாடிய மக்கள் இனி வாழ்க்கையில் முன்னேறட்டும்: மருத்துவர் இராமதாசு title=

தமிழகத்தில் வன்னியர்களுக்கு  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை , அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட  26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. 

இதைத் தொடர்ந்து இதற்காக மருத்துவர் இராமதாசு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு (MK Stalin) தனது நன்றியை தெரிவித்தார்.  வாடிய மக்கள் இனி வாழ்க்கையில் முன்னேறட்டும் என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கோரிக்கையை ஏற்று இதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்த முந்தைய ஆட்சியின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi K Palaniswami), துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை தயாரித்தது முதல் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுனரின் ஒப்புதல் பெற்று அரசாணை பிறப்பிக்கப்படும் வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்த முந்தைய அரசின் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்தார். 

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை நேற்று காலை வெளியிடப்பட்டது. அதில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கான 20% இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு இல்லாமல் தான் செயல்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மிகவும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 8/2021 கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் அரசாணையும் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் வன்னியர் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது; வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியிருந்தார். 

ALSO READ: வன்னியர் இட ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாஸ் நன்றி

அவரது அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, 10.50% இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை 200 புள்ளி ரோஸ்டர் பட்டியலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிடச் செய்துள்ளார். மாணவர் சேர்க்கை அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த பிழையை சுட்டிக்காட்டிய சில மணி நேரங்களில் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரி செய்திருப்பது வரவேற்கத்தக்கது என மருத்துவர் இராமதாசு குறிப்பிட்டிருந்தார். 

வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அது நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்தே செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாலும், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் அடிப்படையில் தான் செய்யப்படும்  என்று தமிழக அரசு அறிவித்திருப்பதாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும், இனி அறிவிக்கப்படவுள்ள மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல், சட்டம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளிலும் 10.50% இடங்கள் வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு  ஒதுக்கப்படும். 6000 மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் வன்னியர் மாணவர்களுக்கு 630 இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். கல்வியில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இது பெருமளவில் பயனளிக்கும். இதன் மூலம் கல்வி மற்றும் சமூக நிலையில் இனி அச்சமூகம் படிப்படியாக முன்னேறும்.

வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஓராண்டில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டால் வன்னியர்களுக்கு குறைந்தது 10,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள துறைகளில் பின்பற்றுவதற்காக 200 புள்ளி ரோஸ்டரில் 21 இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.  இதன்மூலம் வன்னியர்களின் சமூக நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படும். இது தான் எனது இலக்குகளில் ஒன்றாக இருந்தது. அதை எட்டுவதற்காகத் தான் கடந்த 42 ஆண்டுகளாக தொடர் சமூகநீதிப் போராட்டங்களை ஓயாமல் நடத்தி வருகிறேன். அதற்கு இப்போது பயன் கிடைத்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான முந்தைய ஆட்சியில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக இரு ஆண்டுகளாக குரல் கொடுக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை  பல முறை சந்தித்து கோரிக்கை மனுக்களை பா.ம.க அளித்தது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இறுதி முயற்சியாக கடந்த ஆண்டு திசம்பர் ஒன்றாம் தேதி முதல் நடப்பாண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை மொத்தம் 6 கட்டங்களாக 9 நாட்களுக்கு நடத்தப்பட்ட போராட்டத்தின் பயனாகவே  வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50% உள் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 1989 ஆம் ஆண்டிற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, இஸ்லாமியர்கள் உள் ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வன்னியர் 10.50% உள் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்தையும் வென்றெடுத்துக் கொடுத்ததில் எனக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பெரும் பங்கு உண்டு. தேசிய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு,  மருத்துவக் கல்வி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15%, 7.50% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்ததும் மருத்துவர் இராமதாசு (Dr.Ramadoss) தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா? தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: எடப்பாடி பழனிச்சாமி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News