ரூ.10 கட்டணத்தில் பயணிக்க வேண்டிய தொலைவுக்கு ரூ.100 செலுத்த கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:-
சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான சுரங்கப்பாதையில் பெருநகர தொடர்வண்டி சேவை நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சேவை இரு ஆண்டுகள் தாமதமாகத் தொடங்கப்படுகிறது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நேரிசலைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பெருநகர தொடர்வண்டி சேவை தொடங்கப்பட்டது. ஆனால், அந்த நோக்கம் இன்றுவரை நிறைவேற வில்லை. இதற்குக் காரணம் பெருநகர தொடர்வண்டிக் கட்டணம் சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகும் அளவில் இல்லாதது தான்.
ஏழை மக்களின் நலன் கருதி பெருநகர தொடர்வண்டி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் நிலையில் நவீனம் என்ற பெயரில் இன்னும் கூடுதலான கட்டணத்தை நிர்ணயித்து, பெருநகர தொடர்வண்டியில் சாதாரண மக்கள் பயணம் செய்ய முடியாத நிலையை சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான சுரங்கப் பாதையில் பெருநகர தொடர்வண்டியில் ஸ்மார்ட் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பயணம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் அட்டையின் குறைந்தபட்ச விலை ரூ.100 என்றும், தேவைக்கேற்ப ஸ்மார்ட் அட்டையில் பணத்தை நிரப்பி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி அவசரத் தேவைக்காக திருமங்கலம் முதல் அண்ணா நகர் வரை பயணம் செய்வதாக இருந்தால் கூட ரூ.100 கொடுத்து ஸ்மார்ட் அட்டை வாங்கி தான் பயணிக்க வேண்டும். சுரங்கப் பாதை தொடர்வண்டி சேவைக்கான கட்டணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் ரூ.,10 முதல் அதிகபட்சம் ரூ.40 வரை நிர்ணயிக்கப்படலாம் என்றும், நாளை நடைபெறும் விழாவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி, ரூ.10 கட்டணத்தில் பயணிக்க வேண்டிய தொலைவுக்கு ரூ.100 செலுத்த கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
சென்னையில் பெருநகர தொடர்வண்டியில் வாடிக்கையாக பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 25 விழுக்காடு கூட இருக்காது. மீதமுள்ள 75% பயணிகள் அவசரத் தேவைக்காகவும்,. பெருநகர தொடர்வண்டியில் பயணிக்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்காகவும் தான் பயணம் செய்கிறார்கள்.
வாடிக்கையாக பயணிக்கும் பயணிகளுக்கு ஸ்மார்ட் அட்டை முறை மிகவும் வசதியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரே ஒருமுறை பயணம் செய்பவர்களும் ரூ.100 கொடுத்து ஸ்மார்ட் அட்டை வாங்க வேண்டும் என நிர்பந்திப்பது முறையல்ல. பெருநகர தொடர்வண்டியை சாதாரண மக்கள் பயன்படுத்துவதை இந்த அணுகுமுறை தடுத்துவிடும்.
சென்னை கோயம்பேடு - விமான நிலையம் இடையிலான பெருநகர தொடர்வண்டியில் பயணிக்க உரிய கட்டணத்தை செலுத்தினால் அதற்குரிய டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு தொடர்வண்டி நிலையத்திற்குள் நுழையவும், பயணிக்கவும் முடியும்.
அதேபோன்ற அணுகுமுறையை திருமங்கலம் & நேரு பூங்கா இடையிலான சுரங்கப்பாதை சேவையிலும் கடைபிடிக்கலாம். இல்லாவிட்டால், பயணக் கட்டணத்துடன் ஸ்மார்ட் அட்டை தயாரிப்புச் செலவையும் சேர்த்து வசூலிக்கலாம்.
உதாரணமாக, ஸ்மார்ட் அட்டையின் தயாரிப்பு செலவு ரூ.10 என வைத்துக் கொண்டால், திருமங்கலம் - அண்ணாநகர் இடையிலான ரூ.10 கட்டணத்துடன் தயாரிப்பு செலவையும் சேர்த்து ரூ.20 என வசூலிக்கலாம். இது மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. மாறாக ஒருமுறை பயணிப்பதற்குக் கூட ரூ.100க்கு ஸ்மார்ட் அட்டை வாங்க வேண்டும் என்பது சாதாரண மக்களின் பணத்தை பறிக்கும் செயலாகவே அமையும்.
கோயம்பேடு -விமான நிலையம் இடையிலான பெருநகர தொடர்வண்டி சேவை தொடங்கப்பட்ட போதே அதற்கான கட்டணம் மிகவும் அதிகம் என்ற முணுமுணுப்பு மக்களிடம் எழுந்தது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, பெருநகர தொடர்வண்டி சேவை விரிவாக்கம் செய்யப்படும் போது கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதற்கு மாறான செயல்களில் சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. எனவே, ஸ்மார்ட் அட்டைக்கான கட்டணத்தையும், பயணிகள் கட்டணத்தையும் அடித்தட்டு மக்களுக்கும் கட்டுபடியாகும் வகையில் குறைக்க சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் முன்வர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.