அனைத்து கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகளிடம் உள்ள நிலுவை முழுமையாக கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... கரும்பு உற்பத்தியாளர்களுக்கு சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்திருக்கும் நிலுவைத் தொகைகளை வழங்க வசதியாக சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை டன்னுக்கு ரூ.2000 உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இது உழவர்களின் பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்த்து விடாது என்ற போதிலும், சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்கு உதவும்.
தில்லியில் நடைபெற்ற உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விவகார அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை கிலோ 29 ரூபாயிலிருந்து 31 ரூபாயாக உயர்த்தப்படுவதாக பாஸ்வான் தெரிவித்தார். இதன்மூலம் சர்க்கரை ஆலைகளுக்கு அதிக வருவாயும், லாபமும் கிடைக்கும்; அதைக் கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும் என்பது தான் இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும். ஆனால், இது தானாக நடந்து விடாது. மத்திய, மாநில அரசுகள் இவ்விஷயத்தில் தலையிட்டு சர்க்கரை ஆலைகளுக்கு உரிய அழுத்தம் கொடுத்தால் மட்டும் தான் இந்த நோக்கம் நிறைவேறும்; உழவர்களும் பயனடைவார்கள்.
இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இந்தியா முழுவதும் நடப்பு அரவை ஆண்டில் 3.10 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டிருப்பதால் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 6,200 கோடி கூடுதல் லாபம் கிடைக்கும். இது சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.20,167 கோடியுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். இதுதவிர மீதமுள்ள நிலுவைத் தொகையை மற்ற ஆதாரங்களில் இருந்து திரட்டி கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவது என்பது சர்க்கரை ஆலைகளுக்கு மிகவும் சாத்தியமானது தான்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 12 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.240 கோடி கூடுதல் லாபம் கிடைக்கும். தமிழ்நாட்டிலுள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையின் அளவு சுமார் ரூ.1347 கோடிகள் ஆகும். அதில் சுமார் 18% சர்க்கரை விலை ஏற்றத்தின் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான விலையை முறையாக வழங்காமல் பாக்கி வைக்கும் வழக்கத்தை சர்க்கரை ஆலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கமாக்கியுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு நிலுவைத் தொகையின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல முறை போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன; சர்க்கரை ஆலை அதிபர்களுடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல சுற்று பேச்சுகளை நடத்தியுள்ளனர். ஆனால், சர்க்கரை ஆலைகள் இன்று வரை தங்கள் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் இறங்கி வர மறுக்கின்றன. கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையை முற்றிலுமாக மறுத்து விடும் மனநிலைக்கு ஆலைகள் வந்துவிட்டதாக தோன்றுகிறது.
சர்க்கரை ஆலைகளுக்கு உதவும் நோக்கத்துடன் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டுள்ள நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் ஆலை நிர்வாகங்கள் இனியும் இழுத்தடிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை சிக்கலுக்கு உடனே தீர்வு காணப்பட வேண்டும்.
எனவே, சர்க்கரை ஆலை அதிபர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தக் கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையாகவோ, அடுத்த அரவைப் பருவம் தொடங்குவதற்கு முன்பாக சில தவணைகளிலோ வழங்க ஆலைகளுக்கு அரசு அழுத்தம் தர வேண்டும். அடுத்த சில மாதங்களில் அனைத்து விவசாயிகளுக்கு நிலுவை முழுமையாக கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.