மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் நாளே உண்மையான விடுதலை நாள் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவின் 71-ஆவது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளில் நாம் சாதித்தது என்ன? என்பதை ஆராய்ந்து பார்த்தால், நாம் பெற்றதைவிட இழந்தது தான் அதிகமாக இருக்கிறது. அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாம் முன்னேறியிருக்கிறோம். அவை நமது படை வலிமையை உயர்த்த பயன்பட்ட அளவுக்கு, பசியையும், வறுமையையும் ஒழிக்க பயன்படுத்தப் படவில்லை. மத்திய, மாநில அரசுகள் கடை பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் கோடீஸ்வரர்களை பெருங்கோடீஸ்வரர்களாகவும், ஏழைகளை பரமஏழைகளாகவும் மாற்றிக்கொண்டிருக்கின்றன. ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி, சுகாதாரம் ஆகிய சேவைகளும், விவசாயத்திற்கான தேவைகளும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் கல்விக் கட்டணக் கொள்ளைகளும், உழவர்களின் உடமைகள் ஜப்தி செய்யப்படுவதும் இந்தியாவின் அன்றாட நிகழ்வுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
இன்னொருபக்கம் உழவர்களின் துயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உணவு உற்பத்தியில் இலக்கை எட்ட முடியாத இந்தியாவில் உழவர்களின் தற்கொலை மட்டும் இலக்கில்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டும், பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை அம்சங்களையே வலுப்படுத்த முடியாத நிலையில், வளர்ச்சியைப் பற்றி பேசுவதும், வல்லரசாக அறிவித்துக் கொள்ளத் துடிப்பதும் நடிப்பாகவே இருக்கும். ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் அனைத்துக்கும் 1940-களின் இறுதியில் தான் விடுதலை கிடைத்தது. இந்தியாவுடன் விடுதலை பெற்ற காமன்வெல்த் நாடுகளின் இன்றைய நிலையையும், இந்திய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தான் நாம் எங்கு இருக்கிறோம் என்பது நமக்கு உறைக்கும். ஆங்கிலேயரிடம் அடிமைப்படாத, ஆனால், ஒரு கட்டத்தில் இந்தியாவை விட மோசமான நிலையில் இருந்த தென்கொரியா அடைந்ததில் பத்தில் ஒரு பங்கு வளர்ச்சியைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை.
தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், காவிரி முதல் பாலாறு வரை அனைத்து நதிநீர் பிரச்சினைகளிலும் தமிழகத்திற்கான உரிமைகள் மட்டும் அண்டை மாநிலங்களால் மறுக்கப்படுகின்றன. அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அமைச்சர்கள் தங்கள் மாநிலத்திற்கு மட்டும் குரல் கொடுக்கும் அளவுக்கு அவர்கள் மனதை அரசியல் குறுக வைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆணையிட்டும் கூட அதை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு மறுக்கிறது.
இன்னொருபுறம் மது அரக்கனின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியா முழுவதும் மதுவை முழுமையாக ஒழிக்க வேண்டியதன் அவசியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் 3321 மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் ஆணையிட்ட போதிலும், அந்தக் கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு பதிலாக மக்கள் வாழும் பகுதிகளில் திறந்து கொண்டிருக்கிறது தமிழக அரசு. நாட்டின் விடுதலைக்காக களமிறங்காத பெண்கள் கூட மதுவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். தேச விடுதலையை விட மது அரக்கனிடமிருந்து கிடைக்கும் விடுதலையே முதல் தேவையாக உள்ளது.
கிராம சுயராஜ்யமே லட்சியம் என்றார் காந்தியடிகள். ஆனால், மாநில சுயராஜ்யம் என்பதே மாயத் தோற்றமாக மாறியிருக்கிறது. மாநில அரசுகள் அமைத்து நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நீட் தேர்வு நடத்தும் அளவுக்கு மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மாநில சுயாட்சிக்காக பல பத்தாண்டுகளாக முழக்கம் எழுப்பிய அமைப்புகளோ தங்களின் தவறுகளுக்கான தண்டனையிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழக நலனை அடகு வைத்துக் கொண்டிருக்கின்றன.
மாநில சுயாட்சி, மதுவின் பிடியிலிருந்து விடுதலை ஆகியவையே இன்றைய நிலையில் தமிழகத்தின் முதன்மைத் தேவைகள் ஆகும். அவை எப்போது சாத்தியமாகிறதோ அப்போது தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். இத்தகைய மது அரக்கனை ஒழிக்கவும், மாநில சுயாட்சிக்காக போராடவும், அமைதி, வளம், சமத்துவம், சமூக நீதியை வளர்க்கவும் இந்நன்னாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்