வரும் 10 ம் தேதி பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் சென்னையில் புதிய மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல்-டி.எம்.எஸ். வரையிலான சுரங்க வழித்தடத்தில் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பயணிகள் ரயில் போக்குவரத்து வருகிற 10-ம் தேதி தொடங்குகிறது.
இந்த சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். அதைத் தொடர்ந்து பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்- தனுஷ்கோடி ரயில் பாதை ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் சென்னை விமான நிலையத்தில் 2467 கோடி ரூபாயில் புதிய முனையம் மற்றும் திருச்சி விமான நிலையத்தில் 950 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டிடம் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.