திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை ரத்து கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெறுதாக கூறி., மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை ரத்து கோரி மனு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ளார்.
அந்தமனுவில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதால் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே அங்கு தேர்தலை நிறுத்த வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும்.
வரும் மே 19-ஆம் தேதி தமிழகத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்ட நான்கு (திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர்) தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் தேர்தலுக்காக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த மனு அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.