குடியுரிமை சட்டத் திருத்தம், என்பிஆர் பற்றி தேவையற்ற, பொய்யான தகவல்களைக் கூறி மக்களை அச்சுறுத்தும் செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) தயாரிப்பு தொடர்பான மக்களின் அச்சத்தை போக்குவது குறித்து மத்திய அரசிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு இதுவரை எந்த விளக்கமும் வராத நிலையில், தமிழகத்தில் என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், என்பிஆர் கணக்கெடுப்பின் போது சந்தேகத்துக்கிடமானோர் என்று எவரும் குறிப்பிடப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இவை இரண்டும் சரியான நடவடிக்கைகள் ஆகும்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் வழக்கம் கடந்த 2010-ஆம் ஆண்டில் தொடங்கியது. அதன்பின் 2015-ஆம் ஆண்டில் மக்கள்தொகை பதிவேடு மேம்படுத்தப்பட்டது. அதன்தொடர்ச்சியாக நடப்பாண்டில் தேசிய மக்கள்தொகை பதிவேடு மீண்டும் தயாரிக்கப்படவிருக்கிறது. ஆனால், 2010-ஆம் ஆண்டில் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பின் போது மக்களிடம் எழுப்பட்ட வினாக்களை விட இப்போது கூடுதலாக 6 வினாக்கள் எழுப்பப்படவுள்ளன. பெற்றோரின் பிறப்பிடம், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவை குறித்த 6 வினாக்கள் மக்களிடையே அச்சத்தை விதைத்துள்ளன. இந்த வினாக்களை நீக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதை வலியுறுத்தி அண்மையில் நடந்த பா.ம.க.வின் இரு பொதுக்குழு கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய 6 வினாக்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ள போதிலும், அதற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் சர்ச்சைக்குரிய வினாக்களுடன் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்புக்கான பணிகளை தொடங்கினால், இஸ்லாமிய மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் அச்சம் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்புக்கான கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்திருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு தற்காலிக நிம்மதியை அளிக்கக்கூடும். அடுத்தக்கட்டமாக மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து என்பிஆர் கணக்கெடுப்பில் சர்ச்சைக்குரிய கேள்விகளை முழுமையாக நீக்கவும், அதன் மூலம் தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் அச்சத்தை முழுமையாக போக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
மற்றொருபுறம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய இஸ்லாமியர் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த விளக்கத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கான சர்ச்சைக்குரிய வினாக்கள் பற்றி விளக்கமளித்த அவர், என்பிஆர் கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் வினாக்களில், அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை; தெரிந்த தகவல்களை மட்டும் அளித்தால் போதுமானது; எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை; தகவல்களை தராதவர்கள் சந்தேகத்துக்கிடமானவர்கள் என்று குறிப்பிட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். தேசிய மக்கள்தொகை பதிவெடு தயாரிப்பு குறித்து எந்தவிதமான அச்சமும் தேவையில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பின் போது சர்ச்சைக்குரிய வினாக்கள் எழுப்பப்படும்; அவற்றுக்கு விடை அளிக்காவிட்டால் சந்தேகத்துக்கு இடமானவர்களாக அறிவிக்கப்பட்டு, குடியுரிமை பறிக்கப்படும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு பொய்யான பரப்புரை செய்து வந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கத்திற்குப் பிறகு பொய்யான பரப்புரைகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன.
தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இனியும் குடியுரிமை சட்டத் திருத்தம், என்பிஆர் பற்றி தேவையற்ற, பொய்யான தகவல்களைக் கூறி மக்களை அச்சுறுத்தும் செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளனர்.